சென்னை: தமிழகத்தில் சென்னை உள்பட 20 மாவட்டங்களில் குரூப் 2, 2ஏ பதவிக்கு இன்று மெயின் தேர்வு நடக்கிறது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) குரூப் 2 பதவியில் (நேர்முக தேர்வு பதவி) இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்-11 இடம், நன்னடத்தை அலுவலர்-2, தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர்-19,சார் பதிவாளர்(கிரேடு 2)- 17, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் (மாற்றுத்திறனாளி)-8, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை சிறப்பு உதவியாளர்-1, காவல் ஆணையரகம் நுண்ணறிவு பிரிவில் தனி பிரிவு உதவியாளர் -15, குற்றப்புலனாய்வு துறை சிறப்பு பிரிவில் தனிப்பிரிவு உதவியாளர் -43 இடங்கள். குரூப் 2ஏ(நேர்முக தேர்வு அல்லாத பதவி) பதவியில் நகராட்சி ஆணையர்(கிரேடு 2)-9 இடம், தலைமை செயலகம் உதவி பிரிவு அலுவலர்-11, முதுநிலை ஆய்வாளர்-291, 972 இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. மொத்தம் குரூப் 2, குரூப் 2ஏ பதவிகளில் 5 ஆயிரத்து 446 பணியிடங்கள் நிரப்பப்பப்படுகிறது. இப்பதவிக்கான முதல்நிலை தேர்வு கடந்த மே மாதம் 21ம் தேதி நடந்தது. இத்தேர்வை 9 லட்சத்து 94 ஆயிரத்து 878 பேர் எழுதினர். தொடர்ந்து முதல்நிலை தேர்வுக்கான ரிசல்ட் நவம்பர் 10ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் 55,071 பேர் மெயின் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆண்கள் 27,306 பேரும், பெண்கள் 27,764 பேர், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் அடங்குவர். இவர்களுக்கான மெயின் தேர்வு இன்று நடக்கிறது. இன்று காலை, மாலை என இத்தேர்வு நடைபெறுகிறது. இதற்காக சென்னை உள்பட 20 மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 186 இடங்களில் 280 தேர்வு கூடங்களில் இந்த தேர்வு நடக்கிறது. தேர்வை கண்காணிக்க ஒரு கூடத்திற்கு ஒருவர் வீதம் 280 முதன்மை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையை பொறுத்தவரை இத்தேர்வை 8315 பேர் எழுதுகின்றனர். இதற்காக 32 இடங்களில் 38 தேர்வு கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதும் அனைத்து மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது. தேர்வு எழுதுபவர்கள் தவிர வேறு யாரும் தேர்வு கூடத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
