சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் கடலோர பகுதிகள், டெல்டா மாவட்டங்களில் 28ம் தேதி வரை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போது வெப்பநிலை சற்று அதிகரித்து வறண்ட வானிலை நிலவி வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் நேற்று லேசான மழை பெய்துள்ளது. இந்நிலையில் அதிகபட்ச வெப்பநிலையாக ஈரோட்டில் 37 டிகிரி செல்சியஸ் பதிவானது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் நாமக்கல் மாவட்டத்தில் இயல்பைவிட 2.1 முதல் 4.0 செல்சியஸ் வரை வெப்ப நிலை குறைந்து காணப்பட்டது. மேலும், கரூர், மதுரை, கடலூர், சேலம், வேலூர், ஈரோடு மாவட்டத்தில் பொதுவாக 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரியில் பொதுவாக வறண்ட வானிலை காணப்படும். 27, 28ம் தேதிகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.
