×

அதிமுக பொதுக்குழு மட்டுமே செல்லும் என தீர்ப்பு மீண்டும் நீதிமன்றம் செல்வோம்: ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு பல ரகசியங்களை வெளியிடப் போவதாகவும் மிரட்டல்

சென்னை: அதிமுக பொதுக்குழு செல்லும் என்றுதான் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. மீண்டும் நாங்கள் நீதிமன்றத்தை அணுகுவோம் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். கட்சி உடையக்கூடாது என்று இதுவரை பொறுமை  காத்துக்  கொண்டிருந்தோம். எடப்பாடி ஆணவத்தை அடக்குகிற சக்தி தொண்டர்களிடம்,   மக்களிடம் இருக்கிறது. மக்களை சந்திக்கும்போது பல ரகசியங்களை வெளியிடுவோம்  என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம்  முன்னிலையில் பண்ருட்டி ராமச்சந்திரன், மனோஜ் பாண்டியன் ஆகியோர் நேற்று  சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக பொதுக்குழு செல்லும்  என்றுதான் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. இரண்டு பேரும் (ஓபிஎஸ்-இபிஎஸ்)  கையெழுத்து போட்டுதான் பொதுக்குழு கூட்ட வேண்டும் என்று வழக்கு  தொடர்ந்தோம். எது முன்னர் நடந்ததோ அதை தீர்மானிக்காமல், உச்ச நீதிமன்றம்  தனது பொறுப்பை தட்டிக்கழித்துவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. மீண்டும்  நீதிமன்றத்தை அணுகுவோம். இந்த வழக்கில் 5 நாள் வாதங்களை கேட்டார்கள். எதை  கேட்டார்கள் என்று தெரியவில்லை. நியாயங்களை என்றைக்கும் யாரும் வெல்ல  முடியாது.

இந்த தீர்ப்பை பொறுத்தவரையில், பொதுக்குழு செல்லுமா, செல்லாதா  என்று மட்டும்தான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த கூட்டத்தில்  நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள் குறித்து எதுவும் கூறவில்லை, ஆராயவில்லை  என்று தெளிவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் கூறி உள்ளது. இந்த தீர்மானங்களை  எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தை நாடலாம் என்றும்  கூறப்பட்டுள்ளது. ஆகவே எந்த நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்று கேட்டு,  அங்கு சென்று சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை  பொறுத்தவரையில் எந்த வரியும், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று  கூறவில்லை. அந்த தீர்ப்பில் இடைக்கால பொதுச்செயலாளர் நியமனம்  செல்லுபடியாகும் என்றோ அல்லது சட்டவிரோதமாக நீக்கப்பட்டவர்கள்  செல்லுபடியாகும் அல்லது பொதுச்செயலாளராக போட்டியிடுகிறவர்களை இத்தனை பேர்  முன்மொழிய வேண்டும் என்று போட்ட தீர்மானம் செல்லுபடியாகும் என்றோ  சொல்லவில்லை. எங்கள் வழக்கு ஒன்றே ஒன்றுதான், பொதுக்குழு கூட்டப்படும்போது  இரண்டு பேரும் கையெழுத்து போட்டுதான் கூட்ட வேண்டும் என்பதுதான்.  தீர்மானத்துக்குள்ளேயே செல்லவில்லை. பொதுக்குழு கூட்டப்பட்டது செல்லுமா,  செல்லாதா என்பதில் செல்லும் என்பதுதான் இந்த வழக்கின் தீர்ப்பு. இதை தவிர  ஒரு அடி கூட அவர்கள் முன்னேறவில்லை.

இந்திய தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் என்றுதான் இருக்கிறது. இந்த  வழக்கின் தீர்ப்பை எடுத்துக்கொண்டு அதை மாற்ற முடியாது. இந்த தீர்ப்பு  பொதுக்குழு சம்பந்தப்பட்ட வழக்கே தவிர, தீர்மானங்கள் செல்லும் என்ற வழக்கு  அல்ல. இந்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக  அங்கீகரிக்கவில்லை. அதாவது, மாப்பிள்ளை அவரு... சட்டை எங்களது என்றனர். தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:
  நாங்கள் மக்களை நாடி செல்கின்ற நிலையில் உறுதியாக இருக்கின்றோம். மக்கள்  மன்றத்தில் நீதி கேட்போம். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் 50 ஆண்டு காலம்  உயிரை கொடுத்து இந்த கட்சியை வளர்த்து தந்துள்ளார்கள். அவர்கள் வகுத்து  தந்த சட்ட விதியை காப்பாற்ற இன்று நாங்கள் போராடி வருகிறோம். ஜெயலலிதாதான்  நிரந்தர பொதுச்செயலாளர் என்று தீர்மானம் நிறைவேற்றினோம். இந்த இயக்கம்  தொண்டர்களுக்காக இயங்கும் இயக்கம். இன்று என்ன நிலைமை, 10 மாவட்ட  செயலாளர்கள் முன்மொழிந்து, வழிமொழிந்தால் பொதுச்செயலாளர் ஆகி விடலாம் என்கிறார்கள். எப்படி கூவத்தூரில் நடந்ததோ, அப்படி நடந்து கட்சியை  கைக்குள் வைத்திருக்க நினைக்கிறார்கள்.

இனிதான் ஒவ்வொன்றாக வெளியில்  வரும். கட்சி உடையக்கூடாது என்று இதுவரை பொறுமை காத்துக் கொண்டிருந்தோம்.  இன்று அவர் (எடப்பாடி) சொல்கிறார். சசிகலா, டிடிவி, ஓபிஎஸ் ஆகியோரை எந்த  காரணத்தை கொண்டும் சேர்க்க மாட்டோம் என்கிறார். இவர் ஆரம்பித்த கட்சியா  அதிமுக? இல்லை இவர் தாத்தா ஆரம்பித்த கட்சியா? இவர் சொல்வதற்கு என்ன தகுதி  இருக்கிறது. ஆவணத்தின் உச்சத்தில் இருந்து பேசுகிறார். ஆணவத்தை அடக்குகிற  சக்தி அதிமுக தொண்டர்களிடம், மக்களிடம் இருக்கிறது. அது நிரூபணம்  ஆகப்போகிறது என்பதை பார்க்கத்தான் போகிறீர்கள். உறுதியாக, மாவட்ட வாரியாக  மக்களை சந்தித்து நீதி கேட்போம். மக்களை சந்திக்கும்போது பல ரகசியங்களை  வெளியிடுவோம். இனிமேல் தீர்ப்பை எங்கு பெற வேண்டுமோ அங்கு பெறுவோம். கூடிய  விரைவில் சசிகலாவை சந்தித்து பேசுவேன். இவ்வாறு அவர் கூறினார்.


* அதிமுக ஒன்றும் எடப்பாடி தாத்தா ஆரம்பித்த கட்சி அல்ல இது  ஓபிஎஸ் தாத்தா அல்லது, பழனிசாமி  தாத்தா ஆரம்பித்த கட்சி அல்ல. தொண்டர்களுக்காக எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சி. அதற்காகத்தான் இன்று  தர்மயுத்தம் நடத்திக் கொண்டு இருக்கிறோம். இதற்கு நல்ல  தீர்ப்பு வரும் வரை  நாங்கள் உச்சநீதிமன்றத்தில் போராடினோம். இன்றைக்கு  மக்கள் மன்றத்தை நாடி  செல்வதற்கு எங்களுடைய படை தயாராகி புறப்பட்டு  விட்டது. இறுதியாக  மக்களிடத்தில் ஒரு நல்ல தீர்ப்பு கிடைக்கும். உச்ச  நீதிமன்ற தீர்ப்பு  எங்களுக்கு பின்னடைவு இல்லை. இந்த தீர்ப்பு  வந்தபிறகுதான் எங்கள்  தொண்டர்கள் மிகப்பெரிய எழுச்சியோடு இருக்கிறார்கள்.  எத்தனை தேர்தல்  வந்தாலும் எம்ஜிஆர், ஜெயலலிதா வகுத்த சட்ட விதியை  காப்பாற்றுகிறவர்கள்  பக்கம்தான் நாம் இருக்க வேண்டும் என்று மக்களும்  முடிவு எடுத்துள்ளனர்  என்று ஓபிஎஸ் கூறினார்.

Tags : AIADMK General Committee ,Coordinator ,O. Panneerselvam , Only AIADMK General Committee will go to court again: Coordinator O. Panneerselvam's announcement threatens to reveal many secrets
× RELATED தேனி நாடாளுமன்றத் தொகுதியில் டி.டி.வி....