பொன்னேரி: அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் புதிய புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்டது அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சி. இதனை சுற்றி அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பல உள்ளதால் உள்ளூர் வாசிகள் மற்றும் வடமாநில மக்கள் அதிக அளவில் அத்திப்பட்டு புது நகரில் தங்கி வேலை செய்கின்றனர். மேலும், போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கைக்காக்க புதிய புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என ஆவடி காவல்துறை ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர்யிடம் அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேல்.
துணைத்தலைவர் எம்.டி.ஜிகதிர்வேல் ஆகியோர் ஊராட்சி பொது மக்கள் சார்பில் கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்று, அத்திப்பட்டு புதுநகர் மின்வாரிய குடியிருப்பு பகுதியில் புதிதாக புறக்காவல் நிலையம் மற்றும் போக்குவரத்து காவல் நிலையம் அமைக்கப்பட்டது. அதானி துறைமுகம், எண்ணூர் காமராஜர் துறைமுகம், வடசென்னை அனல்மின் நிலையம், கப்பல் கட்டும் தளம், கடல் நீரை குடி நீராக்கும் நிலையம், எண்ணெய் நிறுவனங்கள் என நாள்தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் பயணிப்பதை கண்காணிக்கவும், சட்டம், ஒழுங்கு பிரச்னைகளை கவனிக்கவும் புதிய புறக்காவல் நிலையம் மற்றும் போக்குவரத்து காவல் நிலையம் அமைக்கப்பட்டது.
ஆவடி மாநகர காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் ரிப்பன் வெட்டி வைத்து குத்துவிளக்கேற்றி புறக்காவல் நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
சந்தீப் ராய் ரத்தோர் கூறியதாவது, மீஞ்சூர் காவல் நிலைய எல்லையில் தொழில் நிறுவனங்கள் அதிகளவில் இருப்பதால் போக்குவரத்தை கண்காணிக்கவும், சட்டம், ஒழுங்கு பிரச்னைகளை கையாளவும் அத்திப்பட்டில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. புறக்காவல் நிலையத்தில் 10 பேர் பணியமர்த்தப்பட்டு உள்ளது. சாலைகளை பொதுமக்களுக்கு தொந்தரவு செய்யும் திருநங்கைகளை கட்டுப்படுத்த சமூக நலத்துறையுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த 2 மாதங்களில் ஆவடி மாநகர காவல் எல்லையில் 90கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதை பழக்கத்தின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் சட்ட ஒழுங்கு பணியில் இரவு ரோந்து பணி தீவிரபடுத்தப்படும் என கூறினார். இதில், அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேல்,
துணைத்தலைவர் எம் டி ஜி கதிர்வேல், காவல் துணை ஆணையர் மணிவண்ணன், உதவி ஆணையர்கள் மலைச்சாமி, முருகேசன், செங்குன்றம் போக்குவரத்து புலனாய் துறை ஆய்வாளர் ராஜேஷ், மீஞ்சூர் காவல் நிலைய ஆய்வாளர்கள் சிரஞ்சீவி, டில்லி பாபு மற்றும் உதவி ஆய்வாளர்கள், ஊராட்சி செயலர், அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சி மன்ற அனைத்து வார்டு உறுப்பினர்கள் கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
