×

வாயலூர் ஐந்து காணி பகுதியில் இருளர் குடியிருப்பு பகுதியில் கலெக்டர் ஆய்வு

திருக்கழுக்குன்றம்: வாயலூர் ஐந்து காணி பகுதியில் உள்ள இருளர் குடியிருப்பு பகுதிகளில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். திருக்கழுக்குன்றம் ஒன்றியம் வாயலூர் ஊராட்சியில் ஐந்து காணி உள்ளது. இங்கு, 85க்கும் மேற்பட்ட  இருளர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அவர்களின் அடிப்படை வசதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய நேற்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் ஐந்து காணி பகுதிக்கு வந்து இருளர் மக்களை சந்தித்து அப்பகுதி குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது, அப்பகுதி குழந்தைகளிடம் கல்வியின் அவசியத்தை கருத்தில் கொண்டு மாணவர்கள் தொடர்ந்து கல்வி பயின்று முன்னேற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஐந்து காணியிலிருந்து உய்யாலி குப்பம் மற்றும் காரை திட்டு ஆகிய பகுதிகளுக்கு செல்லும் சாலை மிகவும் மோசமாக உள்ளதால் பள்ளி குழந்தைகள் பள்ளிக்கு சென்று வர மிகவும் சிரமப்படுவதாகவும் அதனை சரி  செய்ய வேண்டுமென இருளர் மக்கள் கேட்டுக் கொண்டதை தொடர்ந்து உடனடியாக தேவைப்படும் இடங்களில் புதிய சாலையும், மற்ற இடங்களில் சாலையை  செப்பணிடவும் ஏற்பாடு செய்வதாக மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.

மேலும், அப்பகுதியில் உள்ள பழமையான அங்கன்வாடி மையம், குடியிருப்புகள், கழிப்பறை ஆகியவைகளை பார்வையிட்டு ஆய்வு செய்து அவைகளை உடனடியாக சரி செய்து தீர்வு காண அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட சமூக நல அலுவலர் சங்கீதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சிலோ இருதய சாமி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நல அலுவலர் வெற்றி, திருக்கழுக்குன்றம் தாசில்தார் ராஜேஸ்வரி, துணை தாசில்தார் சையது அலி, வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகலைசெல்வன், வாயலூர் ஊராட்சி மன்ற தலைவர் மோகனா மதன், துணை தலைவர் ராஜேந்திரன், முன்னாள் தலைவர் அப்துல் உசேன் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Irular ,Vayalur , Collector inspection in Irular residential area in Vayalur five land area
× RELATED இருளர் இன மக்களிடம் விழிப்புணர்வு பிரசாரம்