குன்னவாக்கம் அருகே பரபரப்பு; தனியார் தொழிற்சாலை பேருந்து சென்டர் மீடியனில் மோதி விபத்து: 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் படுகாயம்

வாலாஜாபாத்: குன்னவாக்கம் அருகே தனியார் தொழிற்சாலை பேருந்து சென்டர் மீடியனில் மோதி ஏற்பட்ட விபத்தில், 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் பகுதியில் வாகனங்களுக்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் பணியாற்றி வரும் 25 ஊழியர்களை தொழிற்சாலை பணி முடிந்து ஊழியர்கள் செல்லும் தனியார் பேருந்து ஒரகடம் - வாலாஜாபாத் நோக்கி சென்று கொண்டிருந்தது.

அப்போது, திடீரென வாலாஜாபாத் அடுத்த குன்னவாக்கம் அருகே சென்று கொண்டிருந்த ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவே உள்ள தடுப்பில் மோதி சாலையின் மறுபக்கம் சென்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், சிக்கிக் கொண்டு காயமடைந்த 20க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலை ஊழியர்களை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, 4க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ் மூலம், ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், விபத்தில் படுகாயமடைந்த பலரின் உறவினர்கள் அங்கு வந்து, மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இதுகுறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொழிற்சாலை பேருந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: