இங்கிலாந்து அதிரடி ரன் குவிப்பு: புரூக் - ரூட் ஜோடி அமர்க்களம்

வெலிங்டன்: நியூசிலாந்து அணியுடனான 2வது டெஸ்டில், புரூக் - ரூட் ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 315 ரன் குவித்துள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில்  1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் 2வது மற்றும் கடைசி டெஸ்ட், பேசின் ரிசர்வ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசி. பந்து வீச்சை தேர்வு செய்தது. இங்கிலாந்து தொடக்க வீரர்களாக ஜாக் கிராவ்லி, பென் டக்கெட்  களமிறங்கினர். ஜாக் 2, போப் 10, டக்கெட் 9 ரன் எடுத்து பெவிலியன் திரும்ப, இங்கிலாந்து 6.4 ஓவரில் 21 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து அதிர்ச்சி தொடக்கத்தை சந்தித்தது.

இந்த நிலையில் முன்னாள் கேப்டன் ஜோ ரூட், முதல் டெஸ்ட் ஆட்ட நாயகன் ஹாரி புரூக் இணைந்து 4வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். ஒரு முனையில் ரூட் டெஸ்ட் போட்டிக்கே உரிய நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, ஒருநாள்... டி20... போல அடித்து விளையாட ஆரம்பித்த புரூக் நியூசி. பந்துவீச்சை தவிடு பொடியாக்கினார். புரூக் 107 பந்துகளில் சதத்தை கடந்தார். தனது 6வது டெஸ்டில் விளையாடும் புரூக் விளாசும் 4வது சதம் இது. அதே ஓவரில் ரூட் 122 பந்தில் 50 ரன்னை எட்டினார். சதம் அடித்த பிறகு டாப் கியரில் எகிறிய புரூக் பவுண்டரியும் சிக்சருமாக விளாசித் தள்ள இங்கிலாந்து ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

65வது ஓவரின் கடைசி பந்தில் தனது 29வது சதத்தை எட்டினார் ரூட். அப்போது மழை குறுக்கிடவே ஆட்டம் தடைபட்டது. அதன் பிறகும் மழை நிற்காததால் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்த நிலையில், இங்கிலாந்து 3 விக்கெட் இழப்புக்கு 315 ரன் குவித்துள்ளது. புரூக்  184 ரன் (169 பந்து, 24 பவுண்டரி, 5 சிக்சர்), ஜோ ரூட் 101 ரன்னுடன் (182 பந்து, 7 பவுண்டரி) களத்தில் உள்ளனர். இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு ஆட்டமிழக்காமல் 294ரன் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நியூசி. தரப்பில்  மேட் ஹென்றி 2, கேப்டன் டிம் சவுத்தீ 1 விக்கெட் எடுத்தனர். இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது.

Related Stories: