×

பவுஞ்சூர் அருகே சிப்காட் தொழிற்பேட்டை அமையவுள்ளதால் கூவத்தூர் - முதுகரை நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் மும்முரம்: விரைவில் முடியும் என அதிகாரிகள் தகவல்

செய்யூர்: பவுஞ்சூர் அருகே சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கான பணிகள் நடந்து வரும்நிலையில், கூவத்தூர் - முதுகரை நெடுஞ்சாலை விரிவாக்கப் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இந்த பணிகள் விரைவில் நிறைவடையும் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் ஒன்றியத்தில் கொடூர் ஊராட்சி உள்ளது. இவ்வூராட்சியில் பல ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதன்காரணமாக, செய்யூர் தொகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்து வருகிறது.

மேலும், ஆங்காங்கே சாலை விரிவாக்க பணிகளும் நடந்து வருகிறது. குறிப்பாக மதுராந்தகத்தில் இருந்து கொடூர் பகுதிக்கு செல்லவேண்டும் என்றால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் முதுகரை, பவுஞ்சூர் வழியாக செல்லும் நெடுஞ்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நெடுஞ்சாலை குறுகியுள்ளதால் தொழிற்பேட்டை உருவாக்கத்திற்கு பிறகு போக்குவரத்து அதிகரிக்கும் நிலை உள்ளது. இச்சாலை அப்படியே இருந்தால் விபத்தும் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.

இதனை கருத்தில் கொண்டு நெடுஞ்சாலை துறையினர் கூவத்தூரில் இருந்து முதுகரை வரையிலான 20 கிலோ மீட்டர் சாலை விரிவாக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சாலை விரிவாக்கப் பணிக்காக சாலை இருபுறமும் உள்ள செடிகொடிகள் அகற்றப்பட்டு இயந்திரங்கள் மூலம் சாலை அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இந்த சாலை விரிவாக்க பணிகள் இன்னும் சில மாதங்களில் நிறைவுபெறும் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Coovatur-Mudukarai ,Chipgad Industrial Estate ,Pounjoor , Coovatur-Mudukarai highway widening work is busy due to the construction of Chipgad Industrial Estate near Pounjoor: Officials informed that it will be completed soon.
× RELATED பவுஞ்சூர் பஜாரில் வாரசந்தை நடைபாதை...