×

நாகாலாந்து, மேகாலயாவில் நாளை பிரசாரம் ஓய்கிறது: 120 பதவிகளுக்கு 558 பேர் போட்டி

அகர்தலா: நாகாலாந்து, மேகாலயாவில் நாளை தேர்தல் பிரசாரம் முடியும் நிலையில், 120 பதவிகளுக்கு 558 பேர் போட்டியிட்டுள்ளனர். வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து சட்டப் பேரவைகளுக்கான தேர்தல்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. கடந்த சில தினங்களுக்கு முன் திரிபுராவில் வாக்குப்பதிவு நடைபெற்றது. தொடர்ந்து மேகாலயா மற்றும் நாகாலாந்தில் வரும் 27ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேகாலயாவை பொருத்தமட்டில் மொத்தமுள்ள 60 இடங்களுக்கு 11 கட்சிகளைச் சோ்ந்த 375 பேர் போட்டியிட்டுள்ளனர். பாஜக, காங்கிரஸ் கட்சிகள் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டுள்ளன.

ஆளும் தேசிய மக்கள் கட்சி (என்பிபி) 57 தொகுதிகளிலும், திரிணாமுல் காங்கிரஸ் 56 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. அதேபோல் நாகாலாந்தை பொருத்தமட்டில் மொத்தமுள்ள 60 இடங்களுக்கு 183 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். மேற்கண்ட இரு மாநிலங்களுக்கும் மொத்தமுள்ள 120 பதவிகளுக்கு 558 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். இந்நிலையில் பிரதமர் மோடி இன்று நாகாலாந்தில் பிரசாரம் செய்கிறார். நாளை மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்வதால் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.


Tags : Meghalaya, Nagaland , Campaigning ends tomorrow in Nagaland, Meghalaya: 558 contest for 120 posts
× RELATED மேகாலயா, நாகலாந்தில் நாளை...