×

சென்னையில் ஆதரவின்றி சுற்றித்திரிந்த 12 நபர்கள் “காவல் கரங்கள்'மூலம் மீட்கப்பட்டு அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர் வசம் ஒப்படைப்பு

சென்னை: சென்னையில் ஆதரவின்றி சுற்றித்திரிந்த 12 நபர்கள் “காவல் கரங்கள் மூலம் மீட்கப்பட்டு, கூடுதல் காவல் ஆணையாளர் மூலம் அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர் வசம் ஒப்படைக்கப்பட்டனர். சென்னை பெருநகர காவல் துறையில் காவல் கரங்கள் உதவி மையம் கடந்த 21.04.2021 அன்று உயர்திரு காவல் ஆணையாளர் மூலம் ஆரம்பிக்கப்பட்டு நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. காவல் கரங்கள் மூலம் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் ஆதரவில்லாமல் சுற்றி திரியும் மனநிலை மற்றும் உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களையும், முதியோர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளையும் கண்டறிந்து உரிய பாதுகாப்புடன் NGO க்கள் உதவியுடன் மீட்டு, தேவைபடுவோருக்கு மருத்துவ சிகிச்சை அளித்தும், பாதுகாப்பாக காப்பகங்களில் தங்க வைத்தும் நல்லமுறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

மேலும் அவர்களுடைய உரிய முகவரியை கண்டறிந்து அவர்களுடைய பெற்றோர்களுடனும், உறவினர்களுடனும் நல்ல முறையில் சேர்த்து வைக்கும் பணியையும் காவல் கரங்கள் தொடர்ந்து செய்து வருகிறது. இது தவிர உரிமை கோரப்படாத ஆதரவற்ற இறந்த உடல்களை தன்னார்வலர்களின் உதவியுடன் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு கண்ணியத்துடன் அடக்கம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னையில் ஆதரவற்ற நிலையில் சாலையில் சுற்றி திரிபவர்களை மீட்டு, அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு பாதுகாப்பாக காப்பகத்தில் தங்க வைத்து பராமரிக்கப்பட்டு வந்து, அவர்கள் உடல்நிலை மற்றும் மனநிலை சற்று முன்னேறியவுடன் அவர்களிடம் காவல் கரங்கள் அமைப்பின் மூலம் நேரடியாக விசாரிக்கப்பட்டு அவர்கள் அளித்த சில தகவல்களின் அடிப்படையில் அவர்களின் முகவரி கண்டறிய சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திலும், பொதுமக்களிடமும் தொடர்பு கொண்டு அவர்களது புகைப்படத்தை காண்பித்து விசாரிக்கப்பட்டதில், தமிழகத்தைச் சேர்ந்த 10 நபர்கள் மற்றும் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 2 நபர்கள் என 12 நபர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் முகவரி கண்டறியப்பட்டது.

இதில் 20 வருடங்களுக்கு முன்பு காணாமல் போனவர்களும் அடங்குவர். இன்று இவர்களை அவர்களின் குடும்பத்துடன் சேர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் மீட்கப்பட்ட நபர்களை அவர்களது குடும்பத்தினர் வசம் ஒப்படைக்க உத்தரவிட்டதன்பேரில், இன்று (24.02.2023) மாலை, காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல், கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்) .J.லோகநாதன், மீட்கப்பட்ட 12 நபர்களையும், அவர்களது குடும்பத்தினருடன் ஒப்படைத்து, 15 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார். உடன், காவல் துணை ஆணையாளர்கள் S.ராதாகிருஷ்ணன் (தலைமையிடம்), ஆரோக்கியம் (நவீன காவல் கட்டுப்பாட்டு அறை) ஆகியோர் உடனிருந்தனர்.

பல வருடங்கள் காணாமல் போன குடும்ப உறவினர்களை கண்டுபிடித்து, மீட்டுக் கொடுத்த காவல் கரங்கள் அமைப்பினருக்கும், காவல் அதிகாரிகளுக்கும் அக்குடும்பத்தோர் கண்ணீர் மல்க நன்றியை தெரிவித்தனர். இதுவரை காவல் கரங்கள் அமைப்பு மூலம் வீடற்ற, ஆதரவற்ற நிலையில் உள்ள 4,113 நபர்கள் மீட்கப்பட்டு, அவர்களில் 3,137 நபர்கள் காப்பகங்களில் தங்க வைத்தும், 506 நபர்கள் அவர்களது குடும்பத்துடன் சேர்த்து வைக்கப்பட்டும், 379 நபர்கள் மனநல மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டும், அரசு மருத்துவமனைகளில் 91 நபர்கள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றும் காவல் கரங்கள் அமைப்பினர் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், உரிமை கோரப்படாத 1,876 இறந்த உடல்கள் தன்னார்வலர்களின் உதவியுடன் இறுதி மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

Tags : Chennai , 12 homeless persons in Chennai were rescued by 'guardian hands' and handed over to their families and relatives.
× RELATED வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் கமிஷனர் ஆய்வு