×

நாகையில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.26 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகள் பறிமுதல்

நாகை: நாகையில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.26 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு போலிசாரை கண்டு தப்பியோடிய கடத்தல் கும்பலுக்கு கியூ பிரிவு போலீசார் வலைவீசி வருகின்றனர். கடல் அட்டையை சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில், இலங்கை வழியாக வெளிநாடுகளுக்கு கோடிக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள கடல் அட்டைகள் தமிழக கடலோரப் பகுதியில் இருந்து கடத்தப்படுவது வாடிக்கையாகி வருகிறது. மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தியில் இருந்து கடல் அட்டைகள் உயிருடனும், பதப்படுத்தப்பட்ட நிலையிலும் இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் நாகை கீரை கொள்ளை தெருவில் முருகானந்தம் என்பவருக்கு சொந்தமான குடோனில் கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக நாகை கடலோர காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற கடலோர காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகரன் தலைமையில் சென்ற காவலர்கள் குடோனில் சோதனை மேற்கொண்டனர். போலீசாரை கண்டவுடன் அங்கிருந்த கடத்தல் கும்பல் தப்பியோடிய நிலையில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கடல் அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சுமார் 26 லட்சம் ரூபாய் மதிப்பிலான 526 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்த காவல்துறையினர் தப்பியோடிய கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். பதுக்கி வைக்கப்பட்டிருந்த கடல் அட்டைகளை கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடத்தப்பட்டு அங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட திட்டமிடப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. நாகையில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 26 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகள் சிக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Kudon ,Nagay , Sea cards worth around 26 lakh rupees stashed in a godown at Nagai were seized
× RELATED மரக்காணம் அருகே குடோனில் பதுக்கி வைத்திருந்த 85 கிலோ குட்கா பறிமுதல்