ஆணவத்தின் உச்சத்தில் இருக்கிறார் பழனிசாமி; ஆணவத்தை அடக்கும் சக்தி அதிமுக தொண்டர்களுக்கு உண்டு: பன்னீர்செல்வம் பேட்டி

சென்னை: ஆணவத்தின் உச்சத்தில் இருக்கிறார் பழனிசாமி; ஆணவத்தை அடக்கும் சக்தி அதிமுக தொண்டர்களுக்கு உண்டு என பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து சென்னையில் பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், மீண்டும் நீதிமன்றத்தை அணுகுவோம். நியாயமும், நீதியும் எங்கள் பக்கம் இருக்கிறது. பொதுக்குழு கூட்டம் நடந்தது சரி; தீர்மானம் பற்றி எதுவும் சொல்ல மாட்டோம் என்பது பொறுப்பை தட்டிக் கழிக்கும் செயல். உச்சநீதிமன்றம் தனது பொறுப்பை தட்டிக் கழித்துவிட்டதோ என எண்ணத் தோன்றுகிறது. உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் குறித்து கருத்து கூற மறுத்துவிட்டது. ஜூலை 11ல் நடந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என எந்த வரியும் தீர்ப்பில் இல்லை என கூறினார்.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என தீர்ப்பில் இல்லை:

ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஓபிஎஸ் உள்ளிட்டோரை நீக்குவதாக நிறைவேற்றிய தீர்மானங்கள் செல்லும் என தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை. இடைக்கால பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என தீர்ப்பு வழங்கப்படவில்லை என தெரிவித்தார்.

மக்களிடம் நீதி கேட்போம்: பன்னீர்செல்வம்

மக்கள் மன்றத்தில் நாங்கள் நீதி கேட்போம் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியான நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பன்னீர்செல்வம், அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான் என கூறினார்.

பழனிசாமியின் தாத்தா ஆரம்பித்த கட்சி அல்ல அதிமுக:

அதிமுக என்பது எடப்பாடி பழனிசாமியின் தாத்தா ஆரம்பித்த கட்சி அல்ல என பன்னீர்செல்வம் தெரிவித்தார். பன்னீர்செல்வத்தின் தாத்தா அதிமுகவை தொடங்கவில்லை என கூறிய பழனிசாமிக்கு பன்னீர்செல்வம் பதிலடி கொடுத்தார். ஆணவத்தின் உச்சத்தில் பழனிசாமி இருக்கிறார்; ஆணவத்தை அடக்கும் சக்தி அதிமுக தொண்டர்களுக்கு உண்டு என ஓபிஎஸ் கூறினார்.

தீர்ப்பால் பின்னடைவு இல்லை:

அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பால் எங்களுக்கு பின்னடைவு இல்லை. தீர்ப்பை எங்கு பெறவேண்டுமா அங்கு சென்று பெறுவோம். மக்களை சந்திக்கும்போது பல ரகசியங்களை வெளிப்படுத்துவோம். மாவட்ட வாரியாக மக்களை சந்தித்து நீதி கேட்கும் பணியை விரைவில் தொடங்குவோம் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

Related Stories: