×

நாகர்கோவிலில் 35 ஆண்டுக்கு முன் மூடப்பட்ட குளம் மீட்பு

*₹30 லட்சத்தில் சீரமைப்பு

*மேலும் பல குளங்களை மீட்க ஆய்வு

நாகர்கோவில் : நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் ₹30 லட்சம் மதிப்பீட்டில் பெதஸ்தா குளத்தை புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நாகர்கோவில் மாநகராட்சி கடந்த 75 ஆண்டுகள் முன்பு வரை வயல்கள், குளங்கள் நிறைந்து காணப்பட்டது. நாகர்கோவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேறும் நீர் மற்றும் அனந்தனாறு கால்வாய் மூலமாக வரும் தண்ணீர் புதுக்குடியிருப்பு சுப்பையார்குளம், பெருமாள்குளம், வடசேரி ஸ்டேடியம் குளம், நாகராஜா கோயில் குளம் மற்றும் தெப்பக்குளம், செம்மான்குளம் வழியாக பழையாற்றில் கலக்கும்.

இதுபோல் ராமன்புதூரிலிருந்து, செட்டிக்குளம், பூசாஸ்தான்குளம் வழியாக பழையாற்றில் தண்ணீர் வந்து சேரும்வகையில் கால்வாய்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதுதவிர சிறிய நீராழிகள், மழை நீர் மூலம் தேக்கப்படும் குளங்களும் அமைந்திருந்தன. கடந்த 35 ஆண்டுகளில் படிப்படியாக செட்டிகுளம் தொடங்கி பல குளங்கள் அசுத்தம் அடைந்து ஆக்ரமிக்கப்பட்டு கட்டிடங்களாக மாறிவிட்டன.  

 நீதிமன்ற சாலை, வெட்டூர்ணிமடம் போன்ற பகுதிகளில்  முந்திரி தோப்புகளும் காணப்பட்டன. இதில் வெட்டூர்ணிமடம் போன்ற மேட்டுப்பகுதிகளிலிருந்து பாய்ந்து வரும் நீரை சேகரித்து குளம் அமைப்பதற்காக தனியார் ஒருவர் நிலத்தை விலைக்கு வாங்கி அப்போதைய நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்தார். இதன்படி 99 சென்ட் பரப்பளவில், பெதஸ்தா குளம் நகராட்சியால் அமைக்கப்பட்டது. இந்த குளத்ைத பங்களா தெரு, புதுக்குடியிருப்பு, வெட்டூர்ணிமடம், வாட்டர் டேங்க் ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் குளிக்கவும், துணிகளை துவைக்கவும் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் விளைநிலங்கள் வீடுகளாக மாறிய நிலையில், பெதஸ்தா குளம் தூர்வாரப்படாமல், அசுத்தமானது.

திறந்த வெளி கழிப்பிடமாக மாறிய இந்த குளத்தின் கரையில், அப்போது, மனித கழிவுகளை டிரம்களில் சேகரித்து, அவற்றை லாரிகளில் வழங்க சேகரிக்கும் இடமாக இருந்துள்ளது.
எனவே இந்த பகுதியை சுத்தமாக வைக்க வசதியாக கடந்த 35 ஆண்டுகளுக்கு முன் அப்போதைய நகராட்சி தலைவர்  தர்மராஜ், அசுத்தமாக காணப்பட்ட பெதஸ்தா குளம் உள்பட சில பகுதிகளில் கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுத்தார்.

இதன்படி, பெதஸ்தா குளம் இருந்த பகுதி வணிக வளாகமாக உருவாகத் தொடங்கியது. இதற்கு குளத்திற்கு நிலத்தை தானமாக வாங்கிய குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே,  குளத்தின் முன்புறம் வளாகமும், பின்புறம் நீச்சல்குளம் அமைப்பதாக கூறி, பெதஸ்தா வணிக வளாகத்தின் பின்புறம் பெரிய தொட்டியை கட்டினர். எனினும் போதிய பராமரிப்பின்றி அந்த தொட்டியும் மண்ணால் மூடப்பட்டது.

இந்நிலையில் மாநகரை தூய்மையாக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை மேயர் மகேஷ் மேற்கொண்டுள்ளார். சாலைகள், தெருக்கள் பூங்காக்களை தொடர்ந்து பாழடைந்த குளங்களை மீட்டு புனரமைக்க மேயர் மகேஷ், ஆணையர் ஆனந்த் மோகன் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வுகள் மேற்கொண்டார். இதில் முதல் கட்டமாக  பெதாஸ்தா குளம் உள்பட பாழடைந்த குளங்கள், நீராழிகள்  மீண்டும் தோண்டி புனரமைக்கப்பட உள்ளது.

 இதற்காக ஒன்றிய அரசின்  அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் பெதஸ்தாகுளத்தை புனரமைக்கும் பணி ₹30 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படுகிறது. இதனையடுத்து இக்குளத்தை தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில் மண்ணால் மூடப்பட்ட நீச்சல்குளம், தொட்டியும் இடிபடாமல் மீட்கப்பட்டுள்ளது.

வேகமாக சரியும் நிலத்தடி நீர்

நாகர்கோவில் மாநகராட்சி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த 30 ஆண்டுகள் முன்பு கிணறு மற்றும் போர் அமைக்கும்போது 5 அடி தோண்டினாலே  தண்ணீர் பீறிட்டு வரும். இதனால், அதிக பட்சம் 30 அடி போர் போடுவதே பெரும் சவாலாக இருந்தது. ஆனால், குளங்கள், வயல்கள் வீட்டுமனைகளாக மாற்றப்பட்டதால், நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக சரிந்துள்ளதுடன், தண்ணீரும் உவர்ப்பு தன்மையாக மாறியுள்ளது. எனவே தற்போது  குளங்களை மீட்டு புனரமைப்பதால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

வட்டவிளை குளத்திற்கு ₹47.60 லட்சம்

வட்டவிளையில் சூரியகுமார் குளமும் மழைநீர் வடிகாலை நம்பி அமைக்கப்பட்ட குளமாகும். இந்த குளமும் மாசுபட்டு பச்சை நிறத்துடன் தண்ணீர் காணப்படுவதால், மக்கள் இதை பயன் படுத்துவது இல்லை. இந்த குளத்தையும், அம்ரூத் திட்டத்தில் ₹47.60 லட்சத்தில் புனரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர்

தற்போது பெதஸ்தாகுளத்திற்கு தண்ணீர் வரும் வாய்ப்புகள் இல்லை என்பதால், அப்பகுதியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் பெறவும், கழிவுநீரை பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் உள்ள கால்வாய் வழியாக வெளியேற்றவும் திட்டமிட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.

47 நீராழிகள் புனரமைக்கப்படும்

இதுகுறித்து மேயர் மகேஷிடம் கேட்டபோது, நாகர்கோவில் மாநகராட்சியை பொதுமக்கள் ஒத்துழைப்புடன் தூய்மையான முன்மாதிரி மாநகராட்சியாக மாற்றுவதே எனது முதல் குறிக்கோள். இதற்காக பாரபட்சமின்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பசுமைக்கு ஆதரமாக திகழ்ந்த நீராழிகள், குளங்களை மீண்டும் மக்கள் பயன்படுத்தும் வகையில், நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன்.

இதன்படி, முதலில் வடசேரி தழுவிய மகாதேவர் கோயில் குளம் விரைவில் சுத்தமான தண்ணீருடன், அப்பகுதி மக்கள் குளிக்க தயாராகிவிடும். இதுபோல் பெதாஸ்தா குளம், சூரியகுமார் குளம் உள்பட மாநகராட்சியில் உள்ள அனைத்து குளங்களையும், 47 நீராழிகள் ஆகியவற்றையும் மீட்டு புனரமைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன்.

இதில் புத்தேரி குளம் ₹12 கோடியில் தூய்மை ஆவதுடன், பொதுமக்கள் மிகவும் விரும்பும் பொழுதுபோக்கு தளமாக அமையும். பொழுதுபோக்கு அம்சம் இல்லாத மாநகராட்சியில் இக்குளம் இயற்கை சூழ்ந்த சிறந்த பொழுது போக்கு தலமாக அமையும். இரவிலும், இங்கு மக்கள் பொழுதுபோக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார்.

Tags : Nagercoil , Nagercoil: On behalf of the Nagercoil Municipal Corporation, the work of renovating the Bethesda Pond is underway at an estimated cost of ₹30 lakh. Nagercoil
× RELATED நாகர்கோவில் அரசு பொறியியல்...