×

ராயபுரம், அடையாறு மண்டலங்களில் பொது இடங்களில் அதிகளவு குப்பை கொட்டிய நபர்களுக்கு அபராதம் விதித்து மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: ராயபுரம், அடையாறு மண்டலங்களில் பொது இடங்களில் அதிகளவு குப்பை கொட்டிய நபர்களுக்கு அபராதம் விதித்து மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் சார்பில் சென்னை மாநகரை தூய்மையாகவும், அழகுடனும் பராமரிக்க சிங்கார சென்னை 2.0 உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின்கீழ் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னை மாநகராட்சியின் சார்பில் சென்னை மாநகரை அழகுபடுத்தும் வகையில் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை அகற்றி, கண்கவரும் வகையில் வண்ண ஓவியங்கள் வரைதல், பசுமைப் பரப்பை அதிகரிக்கும் வகையில் மரக்கன்றுகள் நடுதல், சாலைகளின் மையத்தடுப்புகளில் செடிகள் நடுதல், மேம்பாலங்களின் கீழ்ப்பகுதியில் செயற்கை நீரூற்று அமைத்தல் போன்ற அழகுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளுதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் நாள்தோறும் சராசரியாக 5,200 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. நாள்தோறும் தூய்மைப் பணியாளர்கள் மூலம் இல்லங்களில் மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரித்து குப்பை சேகரிக்கப்படுகிறது. தரம் பிரிக்கப்பட்ட குப்பைகள் பரவலாக்கப்பட்ட குப்பை பதனிடும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

மறுசுழற்சி செய்யப்பட்ட குப்பைகளை தவிர்த்து மீதமுள்ள குப்பைகள் கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பைக் கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. குப்பைக் கொட்டும் வளாகங்களுக்கு குப்பைகளை அதிகளவில் கொண்டு செல்வதை தவிர்க்கும் வகையில் மாநகராட்சியின் சார்பில் பல்வேறு வகையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, அதிக அளவில் திடக்கழிவு உருவாக்கும் அடுக்குமாடி குடியிருப்புகள், கல்வி நிறுவனங்கள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள், உணவகங்கள், விடுதிகள், தொழிற்சாலைகள் மற்றம் இதர பிற நிறுவனங்கள் தாங்கள் உருவாக்கும் திடக்கழிவுகளை தாங்களே கையாள வேண்டும் எனவும், திடக்கழிவு மேலாண்மை விதி 2016ன்படி நாளொன்றுக்கு 100 கிலோவிற்கு மேல் திடக்கழிவு உற்பத்தி செய்யும் அல்லது 5000 ச.மீ. பரப்பளவு மற்றும் அதற்கு மேல் பரப்பளவு கொண்ட வளாகத்தின் உரிமையாளர்களாகிய அதிகளவு திடக்கழிவு உற்பத்தியாளர்கள் (Bulk Waste Generator) தங்கள் நிறுவனத்தில் உற்பத்தியாகும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தங்களது வளாகத்திலேயே உரம் தயாரிக்கவும், இதரப் பணிகளுக்கு பயன்படுத்தி மறுசுழற்சி செய்து குப்பையில்லாமல் வெளியேற்றுதல் (Zero Garbage) என்ற நிலையினை கொண்டு வர உரிய இயந்திரங்களை கொள்முதல் செய்து குப்பைகளை கையாள வேண்டும் எனவும், குறிப்பிட்ட காலத்திற்குள் இப்பணிகளை செய்ய தவறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், அதிகளவு திடக்கழிவு உற்பத்தியாளர்கள் திடக்கழிவுகளை முறையாக தாங்களே கையாளாமல் மாநகராட்சிக்குட்பட்ட பொது இடங்களில் கொட்டி விடுகின்றனர். இதனால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு மாநகராட்சியின் சார்பில் களஆய்வு மேற்கொள்ளப்பட்டு பொது இடங்களில் அதிகளவு (Unauthorized illegal dumping) குப்பைகள் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, காவல்துறையில் புகார் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் சென்னை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்ட களஆய்வின் போது, ராயபுரம் மண்டலம், வார்டு-63க்குட்பட்ட இ.பி. லிங்க சாலை மற்றும் தெற்கு கூவம் சாலை ஆகிய பகுதிகளில் அதிகளவு திடக்கழிவுகள் கொட்டிய நபர்களுக்கு ரூ.30,000 அபராதமும், கட்டிடக் கழிவுகள் கொட்டிய நபர்களுக்கு ரூ.10,000 அபராதமும் விதிக்கப்பட்டு, மேலும், காவல்துறையில் 15 புகார்கள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அவ்விடத்தில் கொட்டப்பட்டிருந்த திடக்கழிவுகள் மற்றும் கட்டிடக் கழிவுகள் மாநகராட்சி பணியாளர்களால் அப்புறப்படுத்தப்பட்டது.

அடையாறு மண்டலம், வேளச்சேரி, எம்.ஆர்.டி.எஸ். இரயில் நிலையம் அருகில் திடக்கழிவு விதிகளை மீறி அதிகளவு திடக்கழிவுகள் கொட்டிய (Illegal dumping) வாகனத்தை பறிமுதல் செய்து, காவல்துறையில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அதிகளவு திடக்கழிவு உற்பத்தியாளர்கள் திடக்கழிவுகளை முறையாக தாங்களே கையாள வேண்டும். பொது இடங்களில் கொட்டக் கூடாது. மீறும் நபர்கள் மீது அபராதம் விதித்து, காவல்துறையின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Tags : Rayapuram ,Adyar mandals , Corporation action by imposing fine on people who throw excessive garbage in public places in Rayapuram and Adyar mandals
× RELATED சென்னை ராயபுரத்தில் பாதுகாப்பு கருதி...