தீர்ப்பு குறித்து விரைவில் விரிவான அறிக்கை: ஓ.பன்னீர்செல்வம்

பெரியகுளம்: உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து விரைவில் விரிவான அறிக்கை வெளியிடுவேன் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்து உள்ளார்.  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பெரியகுளம் அக்ரஹாரம் தெருவில் உள்ள அவரது  இல்லத்தில் நேற்று இருந்தார். அப்போது, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வெளியானது. இதனையடுத்து பெரியகுளத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள், பெரியகுளம் தென்கரை பெருமாள் கோயில் தெரு, மார்க்கெட் தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகளில் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக சென்று பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேநேரம் ஓபிஎஸ் வீடு முன்பு வழக்கமான ஆதரவாளர்கள் கூட யாரும் காணப்படவில்லை. இந்நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, பெரியகுளத்தில் இருந்த ஓபிஎஸ்சை அவரது ஆதரவாளர்களான மதுரை முன்னாள்  எம்பி கோபாலகிருஷ்ணன், திண்டுக்கல் தெற்கு மாவட்ட  செயலாளர் வைகை பாலன்,  எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில செயலாளர் ராஜ்மோகன், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட   செயலாளர் சுப்பிரமணி, திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் பசும்பொன் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

அப்போது அங்கு வந்த ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜா,  சிறிது நேரத்தில் கிளம்பிச் சென்று விட்டார். மதுரை,  திண்டுக்கல்,  வத்தலக்குண்டு ஆகிய பகுதிகளில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக இருந்த ஓபிஎஸ் நிகழ்ச்சி அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று மாலை ஓபிஎஸ், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘‘உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து விரிவான அறிக்கையை விரைவில் வெளியிட உள்ளேன். தொண்டர்கள் யார் பக்கம் உள்ளனர் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்’’ என்றார்.

Related Stories: