திமுகவினர் மீது கல்வீச்சு : நாம் தமிழர் கட்சியினர் கைது.! 7 பேர் மீது வழக்கு

நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் மேனகாவை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று முன்தினம் மாலை ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.  செய்து வந்தார். 16ம் நம்பர் ரோடு, தெப்பக்குளம் வீதியில் சீமானின் பிரசார வாகனம் சென்றபோது, காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் வீதி வீதியாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திடீரென திமுகவினர் மீது நாம் தமிழர் கட்சியினர் கல்வீசி தாக்கினர். தடுக்க வந்த போலீசாரையும் தாக்கினர்.

இந்த மோதலில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், திமுக நகரச் செயலாளர் முகமது யூனுஸ் (49) உள்ளிட்ட 5 பேரும், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சென்னையை சேர்ந்த ரவிகுமார் உள்ளிட்ட 5 பேரும் மற்றும் ஆயுதப்படை போலீசார் 3 பேரும் காயமடைந்தனர். இந்த மோதல் தொடர்பாக நாம் தமிழர் கட்சியினர் 7 பேர் மீது ஈரோடு வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதில் கணேஷ் பாபு, விஜய் ஆகிய இருவரை கைது செய்தனர். இந்நிலையில், மோதல் நடந்த பகுதியை மேற்கு மண்டல ஐஜி சுதாகர் நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறுகையில், ‘மோதல் சம்பவம் நடந்த பகுதியில் பிரசாரம் செய்ய வேண்டாம் என தெரிவித்துள்ளோம். நாம் தமிழர் கட்சியினர் வேறு பகுதிகளில் பிரசாரம் செய்ய அனுமதி கொடுத்துள்ளோம். இப்பிரச்னைக்காக கூடுதல் பாதுகாப்பு ஏதுவும் செய்யவில்லை. ஏற்கனவே ஈரோடு இடைத்தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார். இதற்கிடையே, அருந்ததியர் பற்றிய சீமானின் சர்ச்சை பேச்சு குறித்து 24 மணி நேரத்தில் விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருந்த நிலையில், நேற்று தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்பாளர் மேனகா ஆஜராகி விளக்கமளித்தார்.

Related Stories: