ரோகிணி ஐஏஎஸ்சுக்கு எதிராக சமூகவலைத்தளத்தில் பதிவிட ஐபிஎஸ் அதிகாரி ரூபாவுக்கு தடை: பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: ஐஏஎஸ் அதிகாரி ரோகிணி சிந்தூரிக்கு எதிராக மீடியா மற்றும் சமூகவலைத்தளங்களில் எந்த கருத்தும் பதிவு செய்யக்கூடாது என்று ஐபிஎஸ் அதிகாரி டி.ரூபாவுக்கு பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றம் தடை விதித்து விசாரணையை மார்ச் 7ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. கர்நாடக மாநில அரசு துறையில் பணியாற்றும் ஐஏஎஸ் அதிகாரி ரோகிணி சிந்தூரி மற்றும் ஐபிஎஸ் அதிகாரி ரூபா மவுதிகல் இடையில் கடந்த 4 நாட்களாக மீடியா மற்றும் சமூகவலைத்தளங்களில் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி பதிவுகள் வெளியாகி வருகிறது.

இருவரையும் அவர்கள் வகித்து வந்த பொறுப்பில் இருந்து விலக்கி காத்திருப்போர் பட்டியலில் வைத்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் ஐபிஎஸ் அதிகாரிக்கு எதிராக ஐஏஎஸ் அதிகாரி ரோகிணி சிந்தூரி நேற்று பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்தார். அம்மனு 74வது சிவில் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் அவசர மனுவாக விசாரணைக்கு ஏற்று கொள்ளப்பட்டது. இதில் ரோகிணி தரப்பில் ஆஜரான வக்கீல்கள் வாதம் செய்தனர். அப்போது ஐபிஎஸ் அதிகாரி ரூபா, மீடியா மற்றும் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வரும் பதிவுகள், ரோகிணியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. ஆகவே அவர் இதுபோன்ற தகவல்கள் வெளியிடுவதற்கு நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். வக்கீல்களின் வாதம் முடிந்து தீர்ப்பை நீதிபதி ஒத்திவைத்தார்.

அதன்படி இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி பிறப்பித்த உத்தரவில் ரோகிணி சிந்தூரிக்கு எதிராக சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியிடுவது, மீடியாக்களுக்கு பேட்டி கொடுக்கவும் ஐபிஎஸ் அதிகாரி ரூபாவுக்கு தடை விதிக்கிறேன். மேலும் இப்புகார் தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதுடன் நோட்டீஸ் கிடைத்த 24 மணி நேரத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று ஐபிஎஸ் அதிகாரி ரூபாவுக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் மார்ச் 7ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Related Stories: