சென்னை: கொத்தடிமை மற்றும் குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிரான சட்டப்பூர்வ பாதுகாப்புகள் குறித்த தகவல்கள் அடங்கிய புத்தகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். கொத்தடிமை தொழிலாளர் முறை மற்றும் குழந்தை தொழிலாளர் முறை என்பது சமுதாயத்தின் வளர்ச்சிக்கும், நாட்டின் எதிர்காலத்திற்கும் மிகப்பெரிய தடை கல்லாகும். இதனை களைந்திட, கொத்தடிமை தொழிலாளர் முறையை 2030ம் ஆண்டிற்குள்ளும், குழந்தை தொழிலாளர் முறையை 2025ம் ஆண்டிற்குள்ளும் முற்றிலுமாக அகற்றிட தமிழ்நாடு அரசு உறுதி பூண்டுள்ளது. இதன் காரணமாக தற்போது தமிழ்நாட்டில் கொத்தடிமை தொழிலாளர்கள் மற்றும் குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது. இந்த நிலையில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள ‘கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழித்தல் தமிழ்நாடு அரசின் சீரிய முயற்சிகள்’ மற்றும் ‘குழந்தை தொழிலாளர் முறை அகற்றுதல் தமிழ்நாடு அரசின் சீரிய முயற்சிகள்’ என்ற புத்தகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் வெளியிட்டார்.
