ராஜினாமா செய்ய வலியுறுத்தி கவர்னர் ரவிக்கு எதிராக மார்க்சிஸ்ட் கருப்பு கொடி: செங்கல்பட்டு, சிதம்பரம், கடலூரில் பலர் கைது

சென்னை: செங்கல்பட்டு, சிதம்பரம், கடலூரில்  கவர்னர் ரவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாட்டில் ஆளுநராக ஆர்.என்.ரவி மார்க்சையும், டார்வினையும் விமர்சித்தார். இந்நிலையில் ஆர்.என்.ரவி அவதூறாக பேசியதற்கு வருத்தம் தெரிவிக்க வலியுறுத்தியும், அவர் செல்லுமிடம் எல்லாம் கறுப்பு கொடி ஏந்தி எதிர்ப்பை தெரிவிப்பது என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு அறிவித்து உள்ளது. இதையடுத்து, நேற்று‌  செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில்  ஆளுநர் ஆர்.என்.ரவி  வருகையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கறுப்பு கொடி காட்டும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் ப.சு.பாரதிஅண்ணா தலைமை வகித்தார்.

சிதம்பரம்: காரல் மார்க்சை குற்றம் சாட்டி பேசிய கவர்னரை கண்டித்து நேற்று காலை 8.30 மணியளவில் சிதம்பரம் தெற்குவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கையில் கருப்பு கொடிகளுடன் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தலைமை குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, முன்னாள் தலைமை குழு உறுப்பினர் மூசா உள்பட 50 பேரை போலீசார் கைது செய்தனர். கடலூர்: சிதம்பரம் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு கடலூர் வழியாக நேற்று காலை சென்னை திரும்பினார். அப்போது கடலூர் சீமாட்டி சிக்னல் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடிகளுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட செயலாளர் மாதவன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். தமிழக ஆளுநருக்கு மொரட்டாண்டி டோல்கேட் அருகே கருப்புக் கொடி காட்ட முயன்ற கம்யூனிஸ்ட் கட்சியினரை ஆரோவில் போலீசார் கைது செய்தனர்.

Related Stories: