×

ராமேஸ்வரம் -காசி ஆன்மிகப் பயணத்திற்கான முதல் அணி பயணிகள் 67 பேருக்கு வாழ்த்து: ஆணையர் முரளீதரன் நேரில் சந்தித்து தெரிவித்தார்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளீதரன் வெளியிட்ட அறிக்கை: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு 2022-2023ம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின் போது ராமேசுவரம், ராமநாதசுவாமி கோயிலிலிருந்து காசி விஸ்வநாதசுவாமி கோயிலுக்கு இவ்வாண்டில் 200 நபர்கள் ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்லப்படுவர். இதற்கான செலவினத் தொகை ரூ.50லட்சத்தை அரசே ஏற்கும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, இந்து சமய அறநிலையத்துறையின் 20 இணை ஆணையர் மண்டலங்களிலும் ஆன்மிகப் பயணம் செல்ல விருப்பமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்று, தகுதி வாய்ந்த 200 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு, 3 அணிகளாக ராமேசுவரத்திலிருந்து காசிக்கு ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

அதன்படி, ராமேசுவரம் - காசி ஆன்மிகப்  பயணத்திற்கான முதல் அணியில் பயணிக்கும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 67 பயனாளிகள் ராமேசுவரத்தில் அக்னி தீர்த்தம் உள்ளிட்ட 23 தீர்த்தங்களில் புனித நீராடி நேற்று காலை விழுப்புரத்திலிருந்து புறப்பட்ட வாரணாசி விரைவு ரயில் மூலம் காசிக்கு புறப்பட்டனர். மேலும் ராமேசுவரம் - காசி ஆன்மிகப் பயணத்திற்கான முதல் அணியில் பயணம் செய்யும் 67 பயனாளிகளை நேற்று சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளீதரன் சந்தித்து, ஆன்மிகப் பயணம் இனிமையாக அமைய வாழ்த்துகள் தெரிவித்தார். இந்நிகழ்வின் போது கூடுதல் ஆணையர்கள் திருமகள், ஹரிப்ரியா, இணை ஆணையர்கள் சுதர்சனம், தனபால், ரேணுகாதேவி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags : Rameswaram-Kashi ,Commissioner ,Muralitharan , Congratulations to the 67 first batch of passengers for the Rameswaram-Kashi spiritual journey: Commissioner Muralitharan personally met and informed
× RELATED தேர்தல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய...