இன்று மகளிர் உலக கோப்பை அரையிறுதி இங்கிலாந்து-தெ.ஆப்ரிக்கா பலப்பரீட்சை

கேப் டவுன்: ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பையின் 8 வது தொடர் தென் ஆப்ரிக்காவில் நடக்கிறது. லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்த நிலையில் ஏ பிரிவில் முதல் 2 இடங்களை பிடித்த ஆஸ்திரலேியா, தென் ஆப்ரிக்கா அணிகளும், பி பிரிவில் முதல் 2 இடங்களை பிடித்த இங்கிலாந்து, இந்தியா அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின. முதல் அரையிறுதி ஆட்டத்தில் நேற்று ஆஸ்திரேலியா-இந்திய அணிகள் களம் கண்டன. இந்நிலையில் 2அரையிறுதியில் பி பிரிவில் முதலிடம் பிடித்த இங்கிலாந்து அணியும், ஏ பிரிவில் 2வது இடம் பிடித்த தெ.ஆப்ரிக்க அணியும் இன்று களம் காணுகின்றன.

முன்னாள் சாம்பியனான இங்கிலாந்து  இதுவரை நடந்த 7 உலக கோப்பைகளில் முதல் உலக  கோப்பையை மட்டும் வென்றது. அதன் பின்னர் நடந்த 6 உலக கோப்பைகளில் 3 முறை இறுதி ஆட்டத்துக்கும்  முன்னேறி உள்ளது. ஆனால் அவற்றில் ஒரு முறைக் கூட கோப்பையை வெல்லவில்லை. அதனால் ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்த முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் களம் கண்டுள்ளது. அதற்கேற்ப இங்கிலாந்து லீக் சுற்றில் தான் விளையாடிய 4 ஆட்டங்களிலும் வென்று பி பிரிவு புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது. அந்த அணியின் டேனியலி, நடாலியா, ஆலீஸ், ஷோபியா, ஷோபி, கேத்ரின், சாரா என பலரும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதே நேரத்தில் எதிர்த்து விளையாட உள்ள தென் ஆப்ரிக்க அணியை குறைத்து மதிப்பிட முடியாது. அரையிறுதிக்கு முன்னேற கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி மட்டுமின்றி, அதிக வித்தியாசத்தில் வெல்வது அவசியம் என்ற நிலை. அதில் வங்கதேசத்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, இன்று அரையிறுதியில் விளையாட உள்ளது. அதுமட்டுமின்றி சில நாட்களுக்கு முன்பு இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முத்தரப்பு தொடரையும் வென்ற உற்சாகத்தில் தெ.ஆப்ரிக்கா உள்ளது. அதனால் சூனே லுவுஸ் தலைமையிலான தெ.ஆப்ரிக்க அணியில் ஷப்னீம், நோன்குலுலேகோ, அயபோங்கா, க்ளோ ட்ரையோன், நாடின், மரிசன்னே என பலரும் அடிக்கடி அதிரடி காட்டி அணியை கரை சேர்க்க காத்திருகின்றனர். அதனால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமிருக்காது.

* நேருக்கு நேர்...

இங்கிலாந்து-தென் ஆப்ரிக்கா  மகளிர் அணிகள் இதுவரை 22 ஆட்டங்களில் நேருக்கு நேர் களம் கண்டுள்ளன. இங்கிலாந்து 19 ஆட்டங்களிலும் ஆஸியும், 3 ஆட்டங்களில் தெ.ஆப்ரிக்காவும் வென்றுள்ளன.

* உலக கோப்பையில்...

டி20 உலக கோப்பை தொடர்களில்  2010, 2014, 2018, 2020 என 4 தொடர்களில் இரு அணிகளும் மோதியுள்ளன. 2020 உலக கோப்பையில், இங்கிலாந்தை 6விக்கெட் வித்தியாசத்தில் தெ.ஆப்ரிக்கா வென்றது. ஆனால் எஞ்சிய 3 உலக கோப்பைகளிலும் இங்கிலாந்து அபார வெற்றிகளை சுவைத்துள்ளது.

* கடைசியாக...

இந்த இரு அணிகளும் கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் கடைசி 4 ஆட்டங்களிலும் இங்கிலாந்து வெற்றி வாகை சூடியுள்ளது. எஞ்சிய ஒரு ஆட்டத்தில் தெ.ஆப்ரிக்கா வென்றுள்ளது.

Related Stories: