சென்னை: சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் அருகே மெத்தம்பெட்டமையின் என்ற போதைப்பொருள் விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் அருகே, இரவு நேரங்களில் அதிகளவில் மெத்தம்பெட்டமையின் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக திருவல்லிக்கேணி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, போலீசார் நேற்று முன்தினம் அதிகாலை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் அருகே ரகசியமாக கண்காணித்தபோது, வாலிபர் ஒருவர் மெத்தம்பெட்டமையின் என்ற போதைப்பொருள் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
உடனே அந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்திய போது, கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதியை சேர்ந்த ராஜசேகர் (32) என்றும், வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட மெத்தம்பெட்டமையின் போதைப்பொருளை வாங்கி சிறு சிறு பொட்டலங்களாக விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதைதொடர்ந்து மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் ராஜசேகரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 8 கிலோ 7 மில்லி கிராம் மெத்தம்பெட்டமையின் மற்றும் ஒரு செல்போன், ரூ.13,500 பணம், சிறிய எடை இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.
