லாரி மீது பைக் மோதல் கே.கே.நகர் இஎஸ்ஐ டாக்டர் பரிதாப பலி: பெண் டாக்டர் கவலைக்கிடம்

புழல்: செங்குன்றத்தில், லாரி மீது பைக் மோதியதில் கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவமனையின் டாக்டர் பரிதாபமாக பலியானார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் நிஷாந்த் (30). இவர், சென்னை அசோக் நகரில் தங்கி இருந்து, கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்தார். அதே மருத்துவமனையில் தர்மபுரியை சேர்ந்த பிரீத்தி (25) என்பவரும் டாக்டராக   பணியாற்றி வருகிறார். நேற்று இருவரும் மோட்டார் சைக்கிளில் கும்மிடிப்பூண்டிக்கு  சென்று விட்டு சென்னைக்கு மாலையில் வந்து கொண்டிருந்தனர்.

செங்குன்றம் அடுத்த நல்லூர் சுங்க சாவடியில் நின்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். படுகாயம் அடைந்த டாக்டர் நிஷாந்த்  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய பிரீத்தியை சுங்கச்சாவடியில் நின்று கொண்டிருந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். தகவல் அறிந்த செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று நிஷாந்த் சடலத்தை மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: