×

டிபன் சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்க மறுப்பு உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கி வாலிபர் படுகொலை

புழல்: சேலம் மாவட்டம், ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் பிரவீன்குமார் (25). இவர், செங்குன்றம் அருகே விஜயநல்லூரில் வாடகை வீட்டில் தங்கி, அங்குள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த 4 ஆண்டுகளாக சூபர்வைசராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு பிரவீன்குமாரை, அந்நிறுவனத்தினர் வேலையில் இருந்து நீக்கினர். இதையடுத்து அவர், சோழவரத்தில் ஒரு தனியார் குக்கர் கம்பெனியில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த 20ம் தேதி தனது தங்கையுடன் செல்போனில் பேசிய பிரவீன்குமார், பின்னர் செல்போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்பிறகு, தனது மகனை தொடர்பு கொள்ள முடியாததால், கடந்த 22ம் தேதி சோழவரம் போலீசில் மகனை காணவில்லை என அவரது தந்தை சக்திவேல் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.

நேற்று முன்தினம் மதியம் விஜயநல்லூர், செல்லியம்மன் கோயில் குளத்தில் பலத்த காயங்களுடன் ஒரு வாலிபரின் சடலம் மிதந்தது. இதை பார்த்த அப்பகுதியினர், உடனடியாக  சோழவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு  விரைந்து வந்த போலீசார், குளத்தில் மிதந்த வாலிபரின் சடலத்தை மீட்டனர்.  பின்னர், சக்திவேல் மற்றும் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தனர். இதையடுத்து, அங்கு விரைந்து வந்த அவர்கள், சடலமாக மீட்கப்பட்டவர்  பிரவீன்குமார்தான் என்பதை உறுதி செய்தனர். பின்னர், சடலத்தை கைப்பற்றிய போலீசார், ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து, நல்லூர் பகுதியை சேர்ந்த  நரேஷ் (24) என்பவரை கைது செய்து விசாரித்தனர்.

அதில், நரேஷின் தாய் லஷ்மி (60), செல்லியம்மன் கோயில் அருகே, டிபன் கடை நடத்தி வருகிறார். கடந்த 20ம்தேதி கடைக்கு வந்த பிரவீன்குமார் டிபன் சாப்பிட்டு விட்டு, பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதை  லஷ்மி தட்டிக்கேட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பிரவீன்குமார், அவரை ஆபாசமான வார்த்தைகளால் பேசிவிட்டு பணம் கொடுக்காமல் சென்றுள்ளார். இதுபற்றி லஷ்மி, தனது மகன் நரேஷூக்கு போன் செய்து தெரிவித்துள்ளார். இதைகள் கேள்விப்பட்டதும் அங்கு வந்த நரேஷ், அதே பகுதியில் பைக்கில் சென்ற பிரவீன்குமாரை வழிமறித்து, உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கி உள்ளார். இதில், படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக பலியாகி உள்ளார். பிறகு அப்பகுதியில் உள்ள செல்லியம்மன் கோயில் குளத்தில் சடலத்தை நரேஷ் வீசி சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து, நரேஷை நேற்று காலை போலீசார் கைது செய்து, பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில்  பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Tiban , A teenager was killed after eating Tiban and refusing to pay with a rolling pin
× RELATED ஆந்திராவில் குடும்பத்தினர் கண்ணெதிரே...