திருத்தணியில் பக்தர்கள் வசதிக்காக மலைக் கோயிலுக்கு மாற்றுப்பாதை ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்ற முடிவு

திருத்தணி: திருத்தணியில் பக்தர்கள் வசதிக்காக மாற்றுப்பாதை அமைக்க முடிவு செய்து ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. திருத்தணி முருகன் மலைக்கோயிலுக்கு வாகனங்கள் எளிதாக வந்துசெல்வதற்கு வசதியாக கோயில் நிர்வாகம் சார்பில் மாற்றுப்பாதை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக மலைக்கோயிலில் இருந்து அமிர்தாபுரம் வரை பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்கும் பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்து விரைவில் டெண்டர் விட இந்து அறநிலையத்துறை முடிவெடுத்துள்ளது.

இந்தநிலையில் இதுசம்பந்தமாக கோயில் துணை ஆணையர் விஜயா, வருவாய்த்துறை, வனத்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் ஆகியோர் கடந்த இரண்டு மாதத்துக்கு முன் மாற்றுப்பாதை அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்தபோது மடம் கிராமத்தை சேர்ந்த சிலர், மாற்றுப்பாதை வரும் பகுதியை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஆக்கிரமிப்பில் உள்ள வீடுகளை உடனடியாக காலி செய்யவேண்டும் என்று சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் வழங்கினர். ஆனால் யாரும் வீடுகளை காலி செய்யாததால் கடந்த 14ம்தேதி கோயில் கண்காணிப்பாளர்கள் சித்ராதேவி, அய்யம்பிள்ளை மற்றும் வருவாய் ஆய்வாளர் கமல், சர்வேயர் கோவிந்தராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு வீடுகளை அளவீடு செய்ய முயன்றனர்.ஆனால் ஆக்கிரமிப்பு இடத்தில் குளம், மரம், செடிகள் அதிக அளவில் உள்ளதால் துல்லியமாக அளவீடு செய்ய முடியாது என்பதால் மற்றொரு நாளில் நவீன சாதனங்களை பயன்படுத்தி நில அளவீடு பணி மேற்கொள்ள திட்டமிட்டு அங்கிருந்து சென்றனர். இதன்படி கோயில் துணை ஆணையர் விஜயா, கண்காணிப்பாளர் சித்ராதேவி, சர்வேயர் கோவிந்தராஜ், வருவாய் ஆய்வாளர் கமல் மற்றும் வருவாய் துறை ஊழியர்கள் ரேடார் (ஜிபிஎஸ் என்கிற அதிநவீன கருவி) கருவியுடன் நேற்று அளவீடு செய்தனர். இதில் முதற்கட்ட அளவீட்டில் 3 குடும்பத்தினர் வீடு மாற்றுப்பாதையை ஆக்கிரமித்துள்ளது  கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வீடுகளை இடிப்பதற்கு கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதுபோக மீதம் உள்ள இடத்தையும் அளவீடு செய்ய திட்டமிட்டுள்ளனர்.

Related Stories: