திருவிழா காலங்களில் மதுபான விற்பனை நேரத்தை குறைக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் மதுரை கிளை

மதுரை: திருவிழா காலங்களில் டாஸ்மாக் மது விற்பனை நேரத்தை குறைப்பது குறித்து தமிழ்நாடு அரசு பரிசீலிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கும்பகோணம் மாசி மகாமக திருவிழா நடைபெறும் மார்ச் 6-ல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கவும், அன்று கும்பகோணம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்க உத்தரவிடக்கோரி கண்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், எல்.விக்டோரியா கவுரி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், கும்பகோணம் மாசி மகாமக திருவிழாவில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டதாக இதுவரை எந்த வழக்கும் பதிவாகவில்லை என்று கூறப்படுகிறது. கோயில் சுற்றுப்பகுதியில் இருக்கும் 8-க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் மூடப்படும் என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், கோயில் திருவிழாவுக்கு அதிகப்படியான பக்தர்கள் வருவதாக மனுதாரர் தெரிவிக்கிறார். எனவே கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்களை கருத்தில் கொண்டு திருவிழா நாட்களில் மதுபானக் கடைகளை திறக்கும் நேரத்தை குறைப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

Related Stories: