சென்னை: தவறான பாதையில் வாகனம் ஓட்டியதற்காக ரூ.1.31 கோடி அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது எனவும் 1,684 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நிலைய காவலில் வைக்கப்பட்டுள்ளன எனவும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னை போக்குவரத்து காவல்துறை நடவடிக்கையால் தவறான வழியில் வாகனம் ஓட்டுவர் விகிதம் மிகவும் குறைந்திருக்கிறது. பல்வேறு போக்குவரத்து விதிமுறைகளை அமல்படுத்துவதன் மூலம் நகரத்தில் சீரான போக்குவரத்தை உறுதிசெய்ய சென்னை போக்குவரத்து காவல்துறை கடுமையாக உழைத்து வருகின்றனர். இருப்பினும், பல சாலைப் பயனாளிகள் தவறான பக்கம் வாகனம் ஓட்டுவது, போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துவது மட்டுமின்றி, மற்ற சாலைப் பயனாளர்களின் பாதுகாப்பை பாதிக்கிறது.
எனவே, வாகன ஓட்டிகளின் தவறான பாதையில் வாகனம் ஓட்டுவதைத் தடுக்க திங்கள் முதல் புதன்கிழமை வரை 3 நாட்களுக்கு சிறப்பு வாகன தணிக்கை ஏற்பாடு செய்யப்பட்டது. இத்தணிக்கை மூலம் மொத்தம் 15,239 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஆன்லைன் கட்டண முறையில் ரூ.51,27,000 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது.
தவறான பாதையில் வாகனம் ஓட்டி விதிமீறுபவர்களை தடுக்க, அவர்களுக்கு அந்த இடத்திலேயே அபராதம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அபராதம் செலுத்தத் தவறினால், அந்த இடத்திலேயே விதியை மீறியவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்யப்படுகின்றன. இதுப்போன்று 1,684 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நிலைய காவலில் வைக்கப்பட்டுள்ளன.
இதற்குண்டான அபராதத் தொகையை செலுத்திய பிறகு அவர்களது வாகனங்கள் விடுவிக்கப்படும். இதுபோன்று இந்த ஆண்டில் மட்டும், 60,181 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, தவறான பாதையில் வாகனம் ஓட்டியதற்காக ரூ.1,31,98,000 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது. இது மாதிரி விதிமீறுபவர்கள் மீது இந்த சிறப்பு நடவடிக்கை எதிர்காலத்தில் தொடரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
