இலங்கை அரசுக்கு எதிராக மக்கள் மீண்டும் போராட்டம்: வரிகள் மற்றும் மின் கட்டண உயர்வுக்கு கடும் கண்டனம்..!

கொழும்பு: 60%க்கும் மேல் மின்கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கையில் தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இலங்கையில் கடந்தாண்டு வரலாறு காணாத கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் வரலாறு காணாத வகையில், விலை வாசிகள் உயர்ந்தது. மேலும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிவாயு பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாக இலங்கை மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்தனர்.

இதற்கு காரணமாக இருந்த ஆளும் ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக பொதுமக்கள் தீவிர போராட்டம் நடத்தினர். பின்னர்  இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. பின்னர் புதிய அதிபராக ரணில்விக்ரமசிங்க பதவியேற்றுள்ளார். இருப்பினும் இன்னும் இலங்கையில் இயல்பு நிலை திரும்பவில்லை. மக்கள் ஆங்காங்கே ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை ராணுவத்தைக் கொண்டு அடக்கும் முயற்சிகளும் நடைபெற்று வருகிறது. இதனிடையே அண்மை காலமாக பல்வேறு வரிகளை உயர்த்திய இலங்கை அரசு கடந்த 16ம் தேதி மின்சார கட்டணத்தை 66% அளவுக்கு உயர்த்தியது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இலங்கை மக்கள் உடனடியாக மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். தலைநகர் கொழும்புவில் கூடிய ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர் மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தான் 200% அளவுக்கு மின்சார கட்டணம் கடுமையாக அதிகரிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் 66% அளவுக்கு மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது அந்நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Related Stories: