×

போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டுபவர்கள் மீது டிவிட்டரில் பொதுமக்கள் அளித்த 1,267 புகாரில் 90.5 விழுக்காடு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: கூடுதல் கமிஷனர் கபில் குமார் சரத்கர் தகவல்

சென்னை: சாலைகளில் போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டுபவர்கள் மீது பொதுமக்கள் டிவிட்டர் மூலம் அளித்த 1,267 புகர்களில் 90.5 விழுக்காடு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கபில் குமார் சரத்கர் தெரிவித்துள்ளார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மாநகர போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கபில் குமார் சரத்கர் இன்று நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறை இடைவிடாத முயற்சிகளை மேற்கொண்டாலும், பல உள்ளூர் போக்குவரத்து சிக்கல்கள் கவனிக்கப்படாமல் போகலாம். இதை போக்க மாநகர போக்குவரத்து போலீசார் டிவிட்டர், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக பக்கங்களை திறந்து, போக்குவரத்து இடையூறுகள் மற்றும் விதிமீறல்கள் பற்றிய ெசய்திகள் பொதுமக்களை சென்றடைய செய்துள்ளது.

மேலும், பொதுமக்கள் போக்குவரத்து விதி மீறல்கள் குறித்து புகார் அளிக்க 9003130103 என்ற வாட்ஸ் அப் எண் அறிவிக்கப்பட்டது.  தற்போதைய நிலவரப்படி மாநகர போக்குவரத்து டிவிட்டர் பக்கத்தில் 10,400 பதிவுகளை பெற்றுள்ளது. டிவிட்டர் பக்கத்தை தற்போது 69,162 பேர் பின் தொடர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் கடந்த 2 மாதங்களில் டிவிட்டர் மூலம் 1267 விதிமீறல்கள் பொதுமக்கள் மூலம் போக்குவரத்து போலீசாரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டன. அதில் 90.5 விழுக்காடு புகார்கள் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டு, அதற்கான பதிவும் டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், மாநகர போக்குவரத்து போலீசாரின் பேஸ்புக் பக்கத்தை 1,01,734 பேர் பின் தொடர்ந்து வருகிறார்கள். இன்ஸ்டாகிராம் பக்கத்தை 5,256 பேர் பின் தொடர்ந்து வருகிறார்கள். இதனால் போக்குவரத்து போலீசார் சார்பில் விழிப்புணர்வு வீடியோக்கள் பதிவு செய்து வருகிறோம். அவை இளைஞர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ள வாட்ஸ் அப் மூலம் கடந்த 2022ல் மொத்தம் 2,062 புகார்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டில் தற்போது வரை 669 புகார்கள் பெறப்பட்டு அவற்றில் 659 புகார்கள் சரி செய்யப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது.  

சமூக வலைத்தளங்களில் அளிக்கப்படும் புகார்கள் பெரும்பாலும் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது, தடை செய்யப்பட்ட இடத்தில் வாகனங்கள் நிறுத்துதல், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வாகனங்கள், வாகன பதிவு எண் இல்லாத மற்றும் தவறான வாகன பதிவு எண் பலகைகள் போன்ற பதிவுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது போன்ற போக்குவரத்து விதிகளை மீறும் நபர்கள் மீது புகார் அளிக்கும் போது, பொதுமக்கள், இடம், தேதி மற்றும் நேரத்தை பற்றிய விபரங்கள் வழங்க வேண்டும். இதனால் விரைந்து விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.

மறுபுறம் போக்குவரத்து போலீசார் மற்றும் அதிகாரிகள் மீது பல குற்றச்சாட்டுகள் சமூக வலைத்தலங்களில் கூறப்படுகிறது. சமூக ஊடகங்களில் இதுபோன்ற புகார்கள் மீது அதிகாரிகள் விசாரணை நடத்திய போது, பொய்யான குற்றச்சாட்டு என தெரியவந்தது. உடனே சமூக வலைத்தளங்களில் தவறாக பதிவுகளை பதிவு செய்த நபர்களிடம் விசாரணை நடத்திய போது, அவர்கள் மன்னிப்பு கோரினர். பிறகு போக்குவரத்து போலீசார் மீது கூறப்பட்டு பொய்யான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கப்பட்டது.

சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை போக்குவரத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர். சிசிடிவி மற்றும் ஏஎன்பிஆர் என்ற ‘மூன்றாவது கண்’ மற்றும் சமூக ஊடகத்தை ‘நான்காவது கண்’ என பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது விழிப்புடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு போக்குவரத்து கூடுதல் கமிஷனர் பேசினார்.


Tags : Twitter ,Commissioner ,Kapil Kumar Sarathkar , Of the 1,267 complaints filed by the public on Twitter against traffic violators, 90.5 percent action has been taken: Additional Commissioner Kapil Kumar Sarathkar said.
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்