×

எடப்பாடி கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம்: வீட்டில் முடங்கிய ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: ஜூலை 11ம் தேதி கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்ற இன்று அளித்த தீர்ப்பு எதிரொலியாக எடப்பாடி அணியினர் உற்சாகம் அடைந்துள்ளனர். அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து பட்டாசு, இனிப்பு வழங்கி தொண்டர்கள் கொண்டாடினர். அதேநேரம், இந்த தீர்ப்பால் ஓ.பன்னீர்செல்வம் அவரது வீட்டில் முடங்கியுள்ளார். 2021ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. இதையடுத்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தேர்தல் தோல்விக்கு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி பேசினர்.

இதையடுத்து அதிமுக கட்சியில் ஒற்றைத் தலைமை (பொதுச்செயலாளர்) பதவியை மீண்டும் கொண்டு வர எடப்பாடி முயற்சி செய்தார். இதற்கு ஓ.பன்னீர்செல்வம் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனாலும், கடந்த ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழுவை கூட்டி ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களையும் அதிமுகவில் இருந்து நீக்கியதுடன், ஒருங்கிணைப்பாளர் பதவியையும் ரத்து செய்துவிட்டு மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி அணியினர் அறிவித்தனர். பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்கும் வரை தற்காலிகமாக எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.

எடப்பாடி அணியினரின் இந்த பொதுக்குழு கூட்டத்தையும், அந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் அங்கீகரிக்க கூடாது என்று ஓ.பன்னீர்செல்வம் அணியினர் உச்ச நீதிமன்றத்தை நாடினர். உச்ச நீதிமன்றம் இன்று காலை அளித்த தீர்ப்பில், எடப்பாடி அணியினர் ஜூலை 11ம் தேதி கூட்டிய பொதுக்குழு செல்லும் என்றும், அந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லும் என்று அதிரடியாக அறிவித்தது. உச்சநீதிமன்ற தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமி அணியினர் உற்சாகம் அடைந்துள்ளனர். இனி அதிமுக முழுவதும் எடப்பாடி கட்டுப்பாட்டில் வந்துவிடும். இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வெளியாகும் என்பதை அறிந்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கூடி இருந்தனர்.

சரியாக இன்று காலை 10.35 மணிக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டது செல்லும் என்று தீர்ப்பு கூறப்பட்டது. இதை கேள்விப்பட்ட கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்த அதிமுக நிர்வாகிகள் பட்டாசு மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாடினர். சில நிர்வாகிகள் உற்சாகத்தின் உச்சிக்கே சென்று, தயாராக கொண்டு வந்த எடப்பாடி பழனிசாமியின் கட்-அவுட்டுக்கு குடம் குடமாக பால் ஊற்றி பாலாபிஷேகம் செய்தனர். வழக்கமாக, சினிமா ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர்களின் படம் வெளியான அன்று தியேட்டர்களில் நடிகர்களின் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து கொண்டாடுவது வழக்கம்.

தற்போது, ஒரு அரசியல் கட்சி தலைவருக்கு அந்த கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமியின் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து நிர்வாகிகள், தொண்டர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தற்போது எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் பலரும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேலையில் மும்முரமாக உள்ளதால் முக்கிய தலைவர்கள் யாரும் சென்னையில் இல்லை. ஆனாலும், கட்சியின் முக்கிய தலைவர்கள் ஈரோடு மற்றும் அவர்களின் சொந்த மாவட்டங்களில் உச்ச நீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பை வரவேற்று பட்டாசு, இனிப்பு வழங்கி கொண்டாடினர். உச்ச நீதிமன்றம் அளித்த இந்த தீர்ப்பின் மூலம் அதிமுக கட்சி எடப்பாடி பழனிசாமியின் முழு கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது.

உச்ச நீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பால் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு இது மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. இன்று காலை தீர்ப்பு வந்தபோது, ஓ.பன்னீர்செல்வம் அவரது வீட்டில்தான் இருந்தார். ஆனாலும் அவர் வீடு இருந்த பகுதி இன்று தொண்டர்களே இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. ஓ.பன்னீர்செல்வமும் தீர்ப்பு குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் வீட்டிலேயே முடங்கி இருந்தார்.

Tags : Edappadi ,O. Panneerselvam , Balabhishekam for Edappadi cut-out: O. Panneerselvam paralyzed at home
× RELATED அதிமுக கொடி, சின்னம் பயன்படுத்த தடை...