×

மெக்சிகோவில் சோகம் அகதிகளை ஏற்றி சென்ற பஸ் கவிழ்ந்து 17 பேர் பரிதாப சாவு

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் அகதிகளை ஏற்றி சென்ற பஸ் கவிழ்ந்து 17 பேர் பரிதாபமாக இறந்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தென் அமெரிக்க நாடுகளை சேர்ந்த பலர், மெக்சிகோவுக்கு வருகின்றனர். அங்கிருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் அகதிகளாக தஞ்சம் புகுந்து வருகின்றனர். இந்நிலையில் மெக்சிகோவின் தெற்கு பகுதியில் உள்ள ஓக்ஸாகா மாகாணத்தில் இருந்து வெனிசுலா, கொலம்பியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த அகதிகள் 40க்கும் மேற்பட்டோர் பஸ்சில் அமெரிக்கா நோக்கி புறப்பட்டனர். பியூப்லா மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலையில் பஸ் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் கவிழ்ந்தது.

இதில், 15 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர். 15 பேர் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடினர். தகவல் அறிந்து போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 2 பேர் பரிதாபமாக இறந்தனர். மற்ற 13 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Mexico , 17 killed as bus carrying refugees overturns in Mexico
× RELATED ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஈக்வடார்...