மகளிர் டி.20 உலக கோப்பை அரையிறுதி ஆஸ்திரேலியாவை சமாளிக்குமா இந்தியா?...கேப்டவுனில் இன்று மாலை பலப்பரீட்சை

கேப்டவுன்: 8வது ஐசிசி மகளிர் டி.20 உலக கோப்பை தொடர் தென்ஆப்ரிக்காவில் நடந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்றஇந்த தொடரில் லீக் சுற்று முடிவில் குரூப் 1 பிரிவில் முதல் 2 இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, குரூப் 2 பிரிவில் முதல் இரு இடம் பிடித்த இங்கிலாந்து, இந்தியா அரைஇறுதிக்கு முன்னேறின. இந்நிலையில் கேப்டவுனில் இன்று நடைபெறும் முதல் அரையிறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன் இந்தியா பலப்பரீட்சை நடத்துகிறது. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்தியா, லீக் சுற்றில் பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ், அயர்லாந்தை வென்ற நிலையில், இங்கிலாந்திடம் தோல்வி கண்டது.

5வது முறையாக அரைஇறுதிக்குள் நுழைந்துள்ள இந்திய அணியில், பேட்டிங்கில் ஸ்மிருதி மந்தனா, ரிச்சா கோஷ், ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும், பந்து வீச்சில் ரேணுகா சிங்கும் வலுசேர்க்கிறார். ஆனால் பேட்டிங்கில் இந்தியாவின் ரன்ரேட் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை. மந்தனா, ரிச்சா கோஷ் தவிர மற்ற அனைவரின் ஸ்டிரைக்ரேட்டும் 100க்கும் கீழ்தான் உள்ளது. மறுபுறம் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா, பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் மிகவும் பலம் வாய்ந்த அணியாக திகழ்கிறது. எல்லா உலகக் கோப்பை போட்டியிலும் அரைஇறுதிக்கு முன்னேறிய ஒரே அணியான ஆஸ்திரேலியாவுக்கு பேட்டிங்கில் அலிசா ஹீலி, கேப்டன் மெக் லானிங், பெத் மூனி, தாலியா மெக்ராத்தும், பந்து வீச்சில் மேகன் ஸ்கட், ஆஷ்லி கார்ட்னெர், ஜார்ஜியா வார்ஹாமும் வலுசேர்க்கின்றனர்.

வலுவான ஆஸ்திரேலியாவை வீழ்த்த வேண்டுமெனில் இந்தியா அதிசயதக்க ஆட்டத்தை வெளிப்படுத்தவேண்டும். இரு அணிகளும் இதுவரை டி.20 கிரிக்கெட்டில், 30 முறை மோதி உள்ளன. இதில் 22ல் ஆஸ்திரேலியா, 7ல் இந்தியா வென்றுள்ளது. ஒரு போட்டி கைவிடப்பட்டுள்ளது. டி.20 உலககோப்பையில் 5 முறை மோதியதில் 3-2 என ஆஸி. முன்னிலை வகிக்கிறது. கடந்த முறை இறுதிபோட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வி கண்டது குறிப்பிடத்தக்கது. இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் காணலாம்.

Related Stories: