மோசடி வழக்கில் டெல்லி மண்டோலி சிறையில் உள்ள சுகேஷின் சிறை அறையில் இருந்து ஆடம்பர பொருட்கள் மற்றும் பணம் பறிமுதல்

டெல்லி: மோசடி வழக்கில் டெல்லி மண்டோலி சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகரின் சிறை அறையில் இருந்து ஆடம்பர பொருட்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சுகேஷ் அறையில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.80,000 மதிப்புள்ள ஜீன்ஸ், விலை உயர்ந்த ஷூக்கள், ரூ.1.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

பல கோடி ரூபாய் மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுகேஷ் சந்திரசேகர்,டெல்லி மண்டோலி சிறை அறையில் இருந்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பறிமுதல் செய்யப்பட்டது. திடீர் சோதனையில் ஆடம்பர பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. CRPF வீரர்கள் பணியாளர்களுடன் சேர்ந்து திடீர் சோதனை நடத்தியபோது, ஜெயிலர் தீபக் சர்மா மற்றும் மற்றொரு அதிகாரியின் முன் சுகேஷ் தனது அறையின் மூலையில் நின்று அழுதார்.

இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் 2017-ல் சுகேஷ் கைது செய்யப்பட்டிருந்தார். டெல்லி திகார் சிறையில் இருந்த போதே பிரபல மருந்து நிறுவன அதிபர் குடும்பத்தினரை ஏமாற்றி ரூ.200 கோடி பறித்ததாக சுகேஷ் மீது புகார் தெரிவிக்கப்பட்டது.

பல்வேறு மோசடி வழக்குகளில் தொடர்புடைய சுகேஷ்-க்கு டெல்லி திகார் சிறை அதிகாரிகளும் உடந்தையாக இருந்ததாக புகார் அளிக்கப்பட்டிருந்தது. சுகேஷ்-க்கு உதவிய சிறை அதிகாரிகள் 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பத்ஹுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக டெல்லி திகார் சிறையில் இருந்து அண்மையில் சுகேஷ் சந்திரசேகர் மண்டோலி சிறைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

மண்டோலி சிறையிலும் சுகேஷ் சொகுசு வாழ்க்கை வாழ்வதாக எழுந்த புகாரை அடுத்து தற்போது அதிகாரிகள் சோதனை செய்தார்கள். இதில் ஆடம்பர பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் நோரா ஃபதேஹி உட்பட பல பாலிவுட் பிரபலங்களை உள்ளடக்கிய ரூ.200 கோடி பணமோசடி வழக்கில் சுகேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: