×

நூற்றாண்டு விழா கொண்டாடும் நெல்லை-திருச்செந்தூர் ரயில் பாதை: மின்சார ரயிலை விரைந்து இயக்க கோரிக்கை

செய்துங்கநல்லூர்: நெல்லை - திருச்செந்தூர் இடையிலான ரயில் பாதை அமைக்கப்பட்டு இன்றுடன் நூறாண்டாகும் நிலையில் மின்சார ரயிலை விரைவில் இயக்க வேண்டுமென பயணிகள் எதிர்பார்க்கின்றனர். திருநெல்வேலி-திருச்செந்தூர் ரயில் பாதைக்கு ஜில்லா போர்டு ரயில்வே என்று  பெயர். காரணம் இந்த ரயில் நிலையத்தினை திருநெல்வேலி ஜில்லா போர்டு  அமைத்தது.  திருச்செந்தூர் ரயில் வழி தடத்துக்காக 1904ம் ஆண்டு ட்ராபிக் சர்வேயும் பிரதம லைன் சர்வையும் நடந்துள்ளது. 1914ம் ஆண்டு இப்பாதைக்கு பூமி பூஜை செய்யப்பட்டது. பணிகள் முடிந்து 23.02.1923ம் தேதி, அப்போதைய சென்னை கவர்னர் கோஷன் பிரபுவால் இப்பாதை திறக்கப்பட்டது. அதன் பின்னர் நெல்லை-திருச்செந்தூர் அகல ரயில் பாதை  27.09.2008 அன்று திறக்கப்பட்டது.

தற்போது  100 ஆண்டு விழாவை கொண்டாடும் நிலையில் திருச்செந்தூர்  ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது. கடந்த 1923ம் ஆண்டு இதே நாளில் திறக்கப்பட்ட திருநெல்வேலி - திருச்செந்தூர் ரயில் பாதை  இன்று அகல ரயில் பாதையாகவும் மின்சார ரயில் வந்து செல்லும் வகையில் மின்பாதையாகவும் ரயில் நிலையங்கள் நவீனமயமாகவும் பரிணாம வளர்ச்சியடைந்து, தென் மாவட்டங்களில் முக்கிய இருப்புப் பாதையில் ஒன்றாக லட்சக்கணக்கான மக்களுக்கு அன்றாட தேவைக்கும் அத்தியாவசிய பணிக்கும் தேவையான ரயில்வே பாதையாக வளர்ச்சி அடைந்துள்ளது.

இதுகுறித்து எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கூறும் போது, ‘திருச்செந்தூர் பகுதியில் ஆரம்ப காலத்தில் இருந்தே ரயில் போக்குவரத்துக்கு முக்கியத்துவம் இருந்துள்ளது.  ஆரம்ப காலத்தில் திசையன்விளையில் இருந்து திருச்செந்தூர் வரை முன்பு ஒரு ரயில் பாதை அமைக்கப்பட்டு இருந்தது. டிராலி என்று சொல்லப்படும் ஒரே ஒரு பெட்டி வைத்து ஓடும் சிறிய ரயில் பாதை இது. குலசேகரன்பட்டினத்தில் சர்க்கரை ஆலை நடத்தியவர்கள் அமைத்த ரயில் பாதை. ஆலைக்கு வேண்டிய பதநீரைக் கொண்டு வர இது பயன்பட்டது. 1927ல் ஆலை முடப்பட்ட பிறகும் கூட இந்த ரயில் பயணிகளுக்காக இயக்கப்பட்டது.

பேருந்துகள் வந்ததும் இந்த ரயிலை நிறுத்தி விட்டனர். தனியார் பாதை என்பதால் தனியார் தாங்கள்  போட்ட தண்டவாளத்தினையும் பெயர்த்துக் கொண்டு சென்று விட்டனர். தற்போது இந்த வழித்தடத்தில் மின்சார ரயிலை இயக்க அனைத்து பணிகளும் முடிந்து சோதனை ஓட்டமும் முடிந்து விட்டது. தொடர்ந்து 100வது ஆண்டை முன்னிட்டு விரைவில் மின் ரயிலை இயக்கி 1 மணி நேரத்துக்கு 1 ரயில் சேவையை நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கும், திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கும் இயக்க வேண்டும். பாலக்காடு எக்ஸ்பிரஸை செய்துங்கநல்லூர், தாதன்குளம், வைகுண்டம் ஆகிய ரயில் நிலையத்தில் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.

ரயில் போக்குவரத்தில் ஆறுமுகநேரி பங்கு: ஆங்கிலேய ஆட்சி காலத்தில் திருநெல்வேலி திருச்செந்தூர் ரயில் பாதை வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் ஆறுமுகநேரி பிரம்மமுத்து நாடார் குடும்பத்தைச் சேர்ந்த எஸ்.பி. பொன்னையா நாடார். பொன்னையா நாடார் 1883ம் ஆண்டு காயல்பட்டினம் உப்பு வர்த்தக கம்பெனியில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது உப்பளங்களில் இருந்து உப்பும், இப்பகுதியில் தயாரிக்கப்படும் கருப்பட்டியும் வெளியூர்களுக்கு வண்டிகள் மூலம் அனுப்பப்பட்டு வந்ததால் பொருள் நஷ்டமும் கால விரயமும் ஏற்பட்டது. இக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு ரயில் பாதை அமைக்க வலியுறுத்தி புறையூர் பங்களாவில் முகாமிட்டிருந்த ஜில்லா கலெக்டர் பக்கிள் துரையிடம் மனு கொடுத்து நடவடிக்கை எடுக்க வைத்தார்.

Tags : Nellai-Tiruchendur , Nellai-Tiruchendur railway line celebrating its centenary year: Request for speedy operation of electric train
× RELATED நெல்லை-திருச்செந்தூர் சாலையில்...