×

தமிழகத்தை நாடி வரும் இதர மாநிலங்கள்; லாரிகளுக்கு பாடி கட்டும் தொழிலில் இந்தியாவின் கவனம் ஈர்க்கும் சங்ககிரி: கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த எதிர்பார்ப்பு

சங்ககிரி: லாரிகளுக்கு பாடி கட்டும் தொழிலில் சங்ககிரி இந்தியாவின் கவனம் ஈர்த்து வருகிறது. எனவே தொழில் வளர்ச்சிக்கான கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என்று கோரிக்ைக எழுந்துள்ளது. சங்கு போன்ற மலையே ஊரின் பிரதான அடையாளம் என்பதால் சங்குகிரி என்று அழைக்கப்பட்டது. அதுவே பிற்காலத்தில் மருவி சங்ககிரி என்று அழைக்கப்படுகிறது. சங்குமலை, குன்றத்தூர், சங்கிலிமலை என்ற பெயர்களாலும் முற்காலத்தில் சங்ககிரி அழைக்கப்பட்டுள்ளது. விஜயநகர அரசர்கள் கட்டிய கோட்டை, அதில் திப்புசுல்தானின் ஆளுமை, இங்கே ஆங்கிலேயரை எதிர்த்த தியாகி தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்ட நிகழ்வு என்று ஏராளமான வரலாற்று சிறப்புகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது சங்ககிரி.

கி.பி.13ம் நூற்றாண்டிலேயே சங்ககிரி, கொங்குநாட்டின் முக்கிய நகரமாய் விளங்கியதற்கு சான்றுகள் உள்ளது. 16ம் நூற்றாண்டில் இந்த ஊர், குன்றத்தூர் என்ற பெயரில் அழைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் காலத்திலும், ஹைதர்அலி, திப்புசுல்தான் காலத்திலும் சங்ககிரி, ஒரு பெரும் நகரமாக விளங்கி உள்ளது. கி.பி.1784 முதல் 1786வரை திப்பு சுல்தான் ஆண்ட போது, ‘முசுபராபாத்’ என்றும் சங்ககிரி அழைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மாவட்டத்தின் முக்கிய நகரமாக சேலம் மாறும் (1823) வரை, சங்ககிரியே அரசியல், மிலிட்டெரிக்கு முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இருந்துள்ளது.

ஆங்கிலேயர்களின் ஆட்சியில் ஜில்லாவாக திகழ்ந்த சங்ககிரியில் 1905ல் சுகாதார அமைப்பு உருவாக்கப்பட்டது. 1915ல் ஊராட்சியாக விரிவுபடுத்தப்பட்டது. தற்போது பேரூராட்சியாக திகழ்கிறது. 1957ம் ஆண்டு சங்ககிரி சட்டமன்றத் தொகுதி உருவாக்கப்பட்டது. இந்தநிலையில் மோட்டார் வாகனத்தொழிலில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறது சங்ககிரி. இதில் லாரிகளுக்கு பாடி கட்டுவதில் தனிமுத்திரை பதித்து, பல்வேறு மாநிலங்களின் கவனத்தை தமிழகத்தின் பக்கம் திரும்பச் செய்துள்ளது.  
உழைக்கும் மக்கள் அதிகம் நிறைந்த சங்ககிரியில் ஆயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரமாக லாரி பாடிகட்டும் தொழிலும், அது சார்ந்த உப தொழில்களும் விளங்கி வருகிறது. இந்த தொழில்கள் மேலும் மேம்படுவதற்கான நவீன யுத்திகளோடு, ஊரின் கட்டமைப்புகளை மேம்படுத்தும் புதிய திட்டங்களை, அரசு வகுத்துக் கொடுத்தால் சிறந்த தொழில்நகரமாக சங்ககிரி உயர்ந்து நிற்கும் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கை.

இது குறித்து சங்ககிரி மோட்டார் வாகன தொழில் அமைப்பாளர்கள் கூறியதாவது: சங்ககிரியில் பெரும்பாலான மக்களுக்கு முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது. 60 ஆண்டுகளுக்கு முன்பு வட மாநிலத்தில் இருந்து குஜராத் மற்றும் மும்பை போன்ற நகரங்களில் உள்ள வெற்றிலை வியாபாரிகள் சங்ககிரி நகரை தேர்ந்தெடுத்து வியாபாரம் செய்தனர். அப்போது வேலூர், ஆத்தூர் பகுதிகளில் இருந்து வெற்றிலையை மாட்டு வண்டிகளில் எடுத்து வந்து சங்ககிரியில் இருந்து ரயில் மூலம் வட மாநிலங்களுக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, மோட்டார் வாகனங்களின் வளர்ச்சி காரணமாக சிறிய அளவில் லாரிகள் மூலம் வேலூர், ஆத்தூரில் இருந்து சங்ககிரி நகருக்கு வெற்றிலை கொண்டுவரப்பட்டது. ஒருகட்டத்தில் அரசு தரப்பில் லாரிகளுக்கு தமிழகம் முழுவதும் இருந்த பர்மிட் சற்று தளர்த்தப்பட்டது.

ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு கவுன்டர் சிக்னேச்சர் என்ற பெர்மிட் தரப்பட்டது. அதன் பயனாக வெற்றிலை போக்குவரத்து ரயில் மூலமாக அனுப்புவது குறைந்து போனது. அதே நேரத்தில் சங்ககிரியில் இருந்தே லாரிகள் மூலம் பெங்களூர் வரை எடுத்துச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அதனால், லாரிகள் சங்ககிரி பகுதிக்கு அதிகளவில் வந்தன. இதற்கிடையில் இந்தியா சிமெண்ட்  நிறுவனத்தின் மிகப்பெரிய ஆலை 1962ம் ஆண்டு, சங்ககிரியில்  நிறுவப்பட்டது. அதற்காக மேலும் கூடுதல் லாரிகள் வரவழைக்கப்பட்டது. மேலும், இந்தியா சிமெண்ட் நிறுவனத்திற்காக குவாரியில் இருந்து சுண்ணாம்புக்கல் எடுத்து வர டிப்பர் போன்ற வாகனங்களும் அதிகமாக வாங்கப்பட்டது.

இதனால், சங்ககிரியில் லாரி தொழில் பிரதான தொழிலானது. இந்த காரணத்தால் அதற்கு இணை தொழிலான லாரி பாடி கட்டுதல், மெக்கானிக் ஒர்க்ஸ் ஷாப், பெயிண்டிங் ஒர்க்ஸ், ஸ்பேர் பார்ட்ஸ் விற்பனை போன்ற பல்வேறு தொழில்களும் இங்கேயே துவங்க ஆரம்பித்தது. இந்தவகையில் லாரி தொழில், இங்கு  முக்கிய தொழிலாக மாறியுள்ளது. அதற்கு பின்னணியாக, டிப்பர் லாரி பாடி கட்டும் தொழிலும் வேரூன்றியுள்ளது. தற்போதைய நிலவரப்படி  தமிழகத்திலேயே சங்ககிரி தான், டிப்பர் லாரி பாடி கட்டுவதற்கு சிறந்த ஊர் என்று பெயர் பெற்றுள்ளது. இந்த தொழிலை மேம்படுத்த உரிய கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வசதிகளை அரசு உருவாக்கித்தர வேண்டும். இதன்மூலம் சங்ககிரி மேலும் தமிழகத்திற்கு புகழ் சேர்க்கும் தொழில் மையமாக மாறும் வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Tamil Nadu ,Sangakiri ,India , Other states seeking Tamil Nadu; Sangakiri draws India's attention to truck body building industry: Expected to improve infrastructure
× RELATED புழல் ஏரி பாதுகாப்பாக உள்ளது; மக்கள்...