×

குருவாயூர் கோவில் யானை பத்மநாபனுக்கு 3ம் ஆண்டு நினைவஞ்சலி

பாலக்காடு: கேரளாவில் பிரசித்தி பெற்ற குருவாயூர் கோவில் கஜரத்னம் பத்மநாபனுக்கு மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி நேற்று நடந்தது. குருவாயூர் கோவில் தேவஸ்தான ரெஸ்ட் ஹவுஸ் அலுவலகத்தில் முன்பாக குருவாயூர் பத்மநாபன் நினைவு உருவச்சிலை அமைந்துள்ளது. இவற்றின் முன்பாக குருவாயூர் கோவில் வளர்ப்பு யானைகள் நினைவஞ்சலி செலுத்தின. முன்னதாக, குருவாயூர் தேவஸ்தான சேர்மன் டாக்டர் வி.கே. விஜயன் குருவாயூர் பத்மநாபன் உருவச்சிலை முன்பாக குத்துவிளக்கேற்றி, மலர்வளையம் வைத்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து, தேவஸ்தான நிர்வாகக்குழு உறுப்பினர்களான பரமேஸ்வரன் நம்பூதிரிப்பாட், மனோஜ், கோபிநாத், மனோஜ் பி.நாயர், ரவீந்தரன், நிர்வாகி கே.பி.விநயன் ஆகியோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். தேவஸ்தான வளர்ப்பு யானைகள் முகாமில் இந்திரசென் யானையின் தலைமையில் வளர்ப்பு யானைகளான கோபிகண்ணன், அக்‌ஷய்கிருஷ்ணன், தேவதாஸ், ராதாகிருஷ்ணன் ஆகிய யானைகள் குருவாயூர் பத்மநாபனுக்கு துதிக்கை உயர்த்தி அஞ்சலி செலுத்தின. நகராட்சி கவுன்சிலர் உதயன், சிற்பி எளவள்ளி நந்தன், தேவஸ்தான உயர் அதிகாரிகள், ஊழியர்கள், பக்தர்கள் ஆகியோர் நினைவஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

கடந்த 2020ம் ஆண்டு குருவாயூர் பத்மநாபன் நோயால் உயிரிழந்தது. கடந்த 1954ம் ஆண்டு பக்தர் ஒருவர் குருவாயூர் கோவிலுக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட யானை குருவாயூர் பத்மநாபன். கடந்த 66 ஆண்டுகளாக குருவாயூர் தேவஸ்தான யானைகளில் முதலிடத்தில் இடம்பிடித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Guruvayur , Guruvayur temple elephant Tribute to Padmanabhan 3rd year
× RELATED குருவாயூர் கோயிலில் நேற்று ஒரே நாளில்...