×

மூணாறு சுற்றுவட்டார பகுதியில் அட்டகாசம்: அரிசி கொம்பன் காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க உத்தரவு

மூணாறு: மூணாறு சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் அரிசி கொம்பன் காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து காங். கட்சியினர் நடத்திய உண்ணாவிரத போராட்டம் நிறைவுக்கு வந்தது. கேரள மாநிலம், மூணாறு எஸ்டேட் பகுதிகள் உட்பட சின்னக்கானல், பூப்பாறை, சாந்தன்பாறை போன்ற பகுதிகளில் சுற்றி திரியும் அரிசி கொம்பன் என்ற காட்டு யானை, ரேஷன் கடை, தொழிலாளர்களின் வீடு ஆகியவற்றை தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது.

இந்த யானை கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 10 பேரின் உயிரை காவு வாங்கியுள்ளது. தாக்குதல் குணம் கொண்ட யானைகள் குறித்து ஆய்வு செய்ய வந்த வனத்துறையின் சிறப்பு அதிகாரியும், தலைமை கால்நடை மருத்துவருமான டாக்டர் அருண் ஸக்கரியா, கடந்த 2 நாட்களுக்கு முன் வனத்துறை தலைமை அதிகாரிகளுக்கு ஒரு அறிக்கை சமர்ப்பித்தார்.

இதனையடுத்து அதிக தாக்குதல் குணம் கொண்ட அரிசி கொம்பன் காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் உத்தரவிட்டுள்ளார். இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
மேலும் வனத்துறையையும், கேரள அரசையும் கண்டித்து பூப்பாறையில் இடுக்கி மாவட்ட காங்கிரஸ் தலைமையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் கடந்த 23 நாட்களாக நடந்து வந்தது.

அரிசி கொம்பன் காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்படும் என்ற உத்தரவு வந்ததையடுத்து, மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் எம்.டி.அர்ஜூனன் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டார். உண்ணாவிரதப் போராட்ட நிறைவு நிகழ்ச்சியில் இடுக்கி மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி.பி.மேத்யூ மற்றும் சேனாபதி வேணு, எம்.என்.கோபி, இப்ராகிம் குட்டி கல்லார், கே.எஸ்.அருண், எம்.என்.கோபி, டி.குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Munnar ,Arisi Kompan , Outcry in Munnar area: Arisi Kompan ordered to capture a wild elephant by injecting anesthesia
× RELATED மூணாறு அருகே பரிதாபம்; செந்நாய்கள் தாக்கி 40 ஆடுகள் உயிரிழப்பு