உடுமலை மாரியம்மன் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்: இன்று நடக்கிறது

உடுமலை: உடுமலை மாரியம்மன் கோயிலின் புதிய தேர் வெள்ளோட்டம் இன்று நடக்கிறது. உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் இக்கோயில் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். நூற்றாண்டு பழமை வாய்ந்த தேரினை யானை வைத்து இழுப்பது வழக்கம். இந்நிலையில் இந்து அறநிலையத்துறை சார்பில் ரூ.50 லட்சம் மதிப்பில் ஆகம விதிகளின்படி புதிய தேர் செய்யும் பணி  கடந்த 2021ம் ஆண்டு  துவங்கியது. புதிய மரத்தேர் செய்யும் பணிகள் பத்ம ஆசனம் வரை 100 சதவீதம் நிறைவடைந்தது.

பழைய தேரின் பெரிய சக்கரங்கள் புதிய தேரில் பொருத்தப்பட்டன. கடந்த டிசம்பர் 14ம் தேதி காலை 5 மணிக்கு பூர்வாங்க சிறப்பு பூஜைகள் செய்து காலை 6 மணிக்கு தேரை இழுத்து வந்து நிலையில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் புதிய தேரின் வெள்ளோட்டம் இன்று (23ம் தேதி) மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், சேகர்பாபு, கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு புதிய தேரின் வெள்ளோட்டத்தை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைக்க உள்ளனர்.

காலை 9 மணிக்கு சிறப்பு பூஜை, ஹோமங்கள், பூர்ணாகுதி மற்றும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளன. பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு புதிய தேரினை வடம் பிடித்து இழுத்து நிலை சேர உதவிடும்படி கோயில் நிர்வாக அறங்காவலர் மற்றும் செயல் அலுவலர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: