×

கடன் வாங்கி தருவதாக நாடு முழுவதும் மோசடி வொண்டர் லோன் செயலி குறித்து விசாரணை நடத்த வேண்டும்: சைபர் க்ரைம் போலீசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கடன் வாங்கித் தருவதாக மோசடி செய்யும் ‘வொண்டர்லோன்’  என்ற செயலி குறித்த விவரங்களை கூகுள் நிறுவனத்திடம் பெற்று விரைந்து விசாரணை நடத்த வேண்டும் என்று சைபர் க்ரைம் போலீசுக்கு உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.  திண்டுக்கல்லை சேர்ந்த முத்து வெங்கடாச்சலம் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், நிதி நிறுவனம்  ரிசர்வ் வங்கியிடம் முறையாக அனுமதியை பெற்று வாகன கடன் வழங்கும் நிதி நிறுவனத்தை நடத்தி வருகிறோம். எங்கள் நிறுவனத்தின் பெயர், முகவரி உள்ளிட்டவைகளை பயன்படுத்தி ‘வொண்டர்லோன்’ என்ற செயலி மூலம் ஒரு கும்பல் அப்பாவி பொதுமக்களிடம் இருந்து கடன் வாங்கித் தருவதாக பண மோசடி செய்து வருகிறது.

 இந்த மோசடி குறித்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் எங்கள் நிதி நிறுவனத்துக்கு இ-மெயில் வந்தது. நாங்கள் உடனடியாக திண்டுக்கல் போலீசில் புகார் செய்தேன். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மோசடி கும்பல் நாடு முழுவதும் பலரிடம் பணத்தை பறித்து வருகின்றனர். இந்த கும்பல் செய்யும் மோசடிக்கு, எங்கள் நிறுவனத்துக்கு எதிராக டெல்லியை சேர்ந்த வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆந்திர மாநிலம், விஜயவாடா போலீசார் இந்த மோசடி குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு வரும்படி எங்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். ஆனால், டிஜிட்டல் பண பரிவர்த்தனை எதுவும் நாங்கள் செய்யவில்லை.

வொண்டர்லோன் என்ற செயலிக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. யாரோ ஒரு மர்ம கும்பல் எங்கள் நிறுவனத்தின் பெயரில் இந்த மோசடியை செய்து வருகிறது. இந்த மோசடி குறித்து ரிசர்வ் வங்கிக்கும், கூகுள் நிறுவனத்துக்கும் ஏற்கனவே புகார் அனுப்பியுள்ளோம். புகாரின் அடிப்படையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ரிசர்வ் வங்கி சார்பில் ஆஜரான வக்கீல் மோகன், மனுதாரர் அனுப்பிய புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு டி.ஜி.பி.க்கு ரிசர்வ் வங்கி பரிந்துரை செய்துள்ளது. அதன்படி சென்னை சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் என்றார்.

கூகுள் நிறுவனம் சார்பில் ஆஜராக வக்கீல் பாலசுப்பிரமணியன், ‘‘வொண்டர்லோன் என்ற செயலியின் யூஆர்எல் முகவரி விவரத்தை குறிப்பிட்ட இ-மெயில் மூலம் அனுப்பி வைத்தால், அந்த செயலி யார் தொடங்கியுள்ளனர் என்பது உள்ளிட்ட விவரங்களை தர கூகுள் நிறுவனம் தயாராக உள்ளது என்றார். சென்னை மற்றும் திண்டுக்கல் சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர்கள் சங்கர், மீனா ஆகியோர் ஆஜராகி, இந்த மோசடி குறித்து புலன் விசாரணை நடத்தி வருவதாக கூறி, புலன் விசாரணையின் நிலை அறிக்கையை தனித்தனியாக தாக்கல் செய்தனர்.

அதில், பிளேஸ்டோரில் இருந்து வொண்டர்லோன் செயலியை அகற்ற கூகுள் நிறுவனத்துக்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறியிருந்தனர். இதையடுத்து நீதிபதி, கூகுள் நிறுவன வக்கீல் கூறும் இ-மெயிலுக்கு, இந்த மோசடி செயலி குறித்த விவரங்களை போலீசார் அனுப்ப வேண்டும். அவர்கள் தரும் விவரங்களை கொண்டு புலன் விசாரணையை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை 12 வாரத்துக்கு தள்ளிவைத்தார்.


Tags : Higher Court ,Wonder , HC directs cybercrime police to conduct nationwide probe into wonder loan scam
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்