×

பட்டப்பகலில் ஓடஓட விரட்டி துணிக்கடையில் புகுந்தகல்லூரி மாணவனுக்கு வெட்டு: பெரவள்ளூரில் பரபரப்பு

பெரம்பூர்: பெரவள்ளூரில், மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறு காரணமாக, பட்டப்பகலில் கல்லூரி மாணவனை ஓட ஓட விரட்டி சென்று துணிக்கடையில் வைத்து வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், மாணவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.சென்னை பெரவள்ளூர் கே.சி. கார்டன் 5வது தெருவை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது 17 வயது மகன் கொடுங்கையூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறான். நேற்று மதியம் 2 மணி அளவில் பெரவள்ளூர் பேப்பர் மில்ஸ் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, 4 பேர் இவனை துரத்திக் கொண்டு ஓடினர். உடனே அப்பகுதியில் உள்ள ஒரு துணிக்கடையில் ஆடை மாற்றும் அறையில் ஓடி ஒளிந்துகொண்டான்.

பின்தொடர்ந்து சென்ற 4 பேர் கும்பல் ஆடை மாற்றும் அறையிலேயே வைத்து சரமாரியாக மாணவனை வெட்டியது. இதில், தலை வலது பக்கம் காது மற்றும் இடது முழங்கை உள்ளிட்ட இடங்களில் வெட்டுக்காயம் விழுந்தது. பிறகு அந்த கும்பல் கடையிலிருந்து ஓடி விட்டது. இதனால், அதிர்ச்சி அடைந்த கடை ஊழியர்கள் மாணவனை மீட்டு, பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவம்பற்றி அறிந்து திருவிக நகர் போலீசார் வந்து, கடையில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். முதற்கட்ட விசாரணையில், நேற்று முன்தினம் இரவு, வெட்டுபட்ட மாணவனும் அவனது நண்பரான பயாஸ் (எ) மணிகண்டன் ஆகியோரும் ஒயின்ஷாப்பில் மது அருந்தி கொண்டிருக்கும்போது, அவ்வழியாக வந்த சூர்யா என்ற நபருக்கும், மணிகண்டனுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு, இதில் மணிகண்டன் மற்றும் வெட்டுப்பட்ட 17 வயது மாணவன் இருவரும் சேர்ந்து சூர்யாவை அடித்து அனுப்பி வைத்துள்ளனர்.

இதை மனதில் வைத்துக் கொண்டு சூர்யா நேற்று தனது நண்பர்களான பவன், கங்கா ஆகிய இருவரை அழைத்துக் கொண்டு, திருவிக நகர் கே.சி. கார்டன் பகுதிக்கு சென்று, மணிகண்டனை தேடி வந்துள்ளனர். அவரை கண்டுபிடிக்க முடியாததால், மணிகண்டனுடன் இருந்த மாணவனை துரத்தி துரத்தி வெட்டியது தெரியவந்தது.இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சூர்யா உள்ளிட்ட அவரது நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர். பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் சிறுவனை ஒரு கும்பல் கத்தியுடன் ஓட ஓட விரட்டிச் சென்று கடையில் வைத்து வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Tags : Bukhunda College ,Peravallur , Cloth shop, for college student, Cut, Busy in Peravallur
× RELATED பெரவள்ளூர் காவல் நிலையத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம்