×

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் இந்திய துணை தலைமை தேர்தல் அதிகாரி முன்னேற்பாடு குறித்து ஆலோசனை: வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்றது

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து இந்திய துணை தலைமை அதிகாரி நேற்று தமிழக தலைமை அதிகாரியுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27ம் தேதி நடக்கிறது. அங்கு காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 77 பேர் போட்டியிடுகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 25ம் தேதி 6 மணியுடன் பிரசாரம் முடிவடைகிறது. இதற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ளது.

இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், நட்சத்திர பேச்சாளர்கள் என பலரும் ஈரோடு கிழக்கு தொகுதியில் முகாமிட்டு தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் பரவலாக வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருள் வழங்கப்படுவதாக பெரிய கட்சிகள் மாறி, மாறி குற்றம்சாட்டி வருகின்றனர். இதையொட்டி தேர்தல் பறக்கும் படையினர், தேர்தல் அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து வரும் புகார்களை தொடர்ந்து ஆங்காங்கே சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும், பெரிய அளவில் எந்த சம்பவங்களும் அங்கு நடைபெறவில்லை என்றே என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், ஈரோடு தொகுதியில் வாக்குப்பதிவை நிறுத்த வேண்டும் என்று எந்த புகாரும் தேர்தல் ஆணையத்துக்கு இதுவரை எந்த கட்சி சார்பிலும் அளிக்கப்படவில்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையர் அஜய் பாதூ நேற்று டெல்லியில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை, தலைமை செயலகத்தில் இருந்தபடி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கலந்து கொண்டார். அதேபோன்று ஈரோடு மாவட்டத்தில் இருந்து கிழக்கு மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் (பொது, செலவினம், காவல்), தேர்தல் நடத்தும் அலுவலர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனையின்போது, ஈரோடு கிழக்கு தொகுதியில்  நடைபெற உள்ள இடைத்தேர்தல் தொடர்பான பணிகள் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையர் அஜய் பாதூ கேட்டறிந்தார். ஆதாரத்துடன் அளிக்கப்படும் புகார் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து, அதுபற்றி விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்ய வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


Tags : Erode ,East ,Deputy Chief Electoral Officer ,India , Erode East By-Election Advised on Advancement of Deputy Chief Electoral Officer of India: Held through Video Conferencing
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்