ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை அரையிறுதியில் இன்று ஆஸி. - இந்தியா மோதல்

கேப்டவுன்: ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பையின் முதல் அரையிறுதியில் ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் இன்று மோதுகின்றன. தென் ஆப்ரிக்காவில் நடைபெற்று வரும் இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் நேற்று முன்தினம் இரவு முடிந்தன. பிரிவு 1ல் முதல் 2 இடங்களைப் பிடித்த  ஆஸ்திரலேியா (8 புள்ளி), தென் ஆப்ரிக்கா (4 புள்ளி) மற்றும் பிரிவு 2ல் முதல் 2 இடங்களை பிடித்த   இங்கிலாந்து (8), இந்தியா (6) அரையிறுதிக்கு முன்னேறின.நியூலேண்ட்ஸ் மைதானத்தில் இன்று மாலை 6.30க்கு தொடங்கும் முதல் அரையிறுதியில் ஆஸ்திரேலியா - இந்தியா பலப்பரீட்சையில் இறங்குகின்றன.

நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா  இதுவரை நடந்த 7 உலக கோப்பை தொடர்களில், முதல் உலக கோப்பையை தவிர மற்ற அனைத்திலும் பைனலுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. அவற்றில் 5 முறை கோப்பையை வென்று சாதனை படைத்த வலுவான அணியாகவும்  உள்ளது. கடந்த  முறை பைனலில் சந்தித்த இந்தியாவை, இந்த முறை அரையிறுதியிலேயே சந்திக்கிறது. மெக் லான்னிங் தலைமையிலான ஆஸி. அணி லீக் சுற்றில் தான் விளையாடிய 4 ஆட்டங்களிலும் வென்று 8 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்தது.

அந்த அணியின்   அலிசா ஹீலி, பெத் மூனி, ஆஷ்லி கார்ட்னர், அலனா கிங், மேகன் ஷூட்,  எல்லிஸ் பெர்ரி, தாஹ்லியா மெக்ராத் என பலரும் அதிரடியாக விளையாடி வருவதால்  ஆஸி. இன்றும் இந்தியாவுக்கு பெரும் சவாலாக விளங்கும். அதே நேரத்தில் இளம் வீராங்கனைகளை கொண்ட ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. லீக் சுற்றில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் மட்டுமே தோற்றது. மற்ற 3 ஆட்டங்களில் வெற்றி வாகை சூடியுள்ளது.

ஹர்மன், மந்தனா, ஷபாலி, ஜெமீமா, ரிச்சா, ராதா, பூஜா, தீப்தி என அதிரடி வீராங்கனைகளுக்கு அணியில் பஞ்சமில்லை. குறிப்பாக, துணை கேப்டன் மந்தனா சிறப்பான பார்மில் உள்ளார். தீப்தி, ரேணுகா, பூஜா பந்துவீச்சும் ஆஸி. தரப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும். இரு அணிகளுமே பைனலுக்கு முன்னேறும் முனைப்புடன் வரிந்துகட்டுவதால், இன்றைய ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.நேருக்கு நேர்: இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் இதுவரை  30 ஆட்டங்களில் மோதியுள்ளன. அதில் ஆஸ்திரேலியா 22 வெற்றியும், இந்தியா 7 வெற்றியும் பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் கைவிடப்பட்டது.

கடைசியாக: இந்த 2 அணிகளும் கடைசியாக மோதிய  5 ஆட்டங்களில்  ஆஸி.  4ஆட்டங்களில் வென்ற்றுள்ளது. எஞ்சிய ஒரு ஆட்டம் சரிநிகர் சமனில் (டை) முடிய, சூப்பர் ஓவர் மூலம் முடிவு எட்டப்பட்டது. அதில் இந்தியா வெற்றி வாகை சூடியது. இந்தியா: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிரிதி மந்தனா (துணை கேப்டன்), அஞ்சலி சர்வனி, யஸ்டிகா பாட்டியா, ஹர்லீன் தியோல், ராஜேஷ்வரி கெயக்வாட், ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), ஷிகா பாண்டே, ரேணுகா சிங், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷபாலி வர்மா, தீப்தி ஷர்மா, தேவிகா வைத்யா, பூஜா வஸ்த்ராகர், ராதா யாதவ். ஆஸ்திரேலியா: மெக் லான்னிங் (கேப்டன்), அலிசா ஹீலி (துணை கேப்டன் / விக்கெட் கீப்பர்), டார்சி பிரவுன், ஆஷ்லி கார்ட்னர், கிம் கார்த், ஹீதர் கிரகாம், கிரேஸ் ஹாரிஸ், ஜெஸ் ஜோனசன், அலனா கிங், தாஹ்லியா மெக்ராத், பெத் மூனி, எல்லிஸ் பெர்ரி, மேகன் ஷூட், அன்னபெல் சதர்லேண்ட், ஜார்ஜியா வேர்ஹம்.

Related Stories: