விழுப்புரம் ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்டு காப்பகத்தில் சேர்த்த 4 பேர் தப்பி ஓட்டம்

கடலூர்: குண்டலப்புலியூர் ஆசிரமத்தில் இருந்து, கடலூர் மனநல காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்த 23 பேரில் 4 பேர் நேற்று தப்பி  ஓட்டம் பிடித்தனர். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே குண்டலப்புலியூரில் அன்புஜோதி ஆசிரமத்தில் பலாத்காரம் உள்பட பல்வேறு முறைகேடுகள் எழுந்ததால் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த 142 பேர் மற்றும் கோட்டக்குப்பத்தில் இருந்து 25 பேர் என மொத்தம் 167 பேர் மீட்கப்பட்டனர். இதில், உடல்நலம் தேறியவர்கள், கடலூர் புதுப்பாளையத்தில் உள்ள தொண்டு நிறுவனத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

இவர்களுக்கு, நேற்று இரவு உணவு வழங்கப்பட்டது. நேற்று காலை எழுந்து பார்த்தபோது, காப்பகத்தின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சி அடைந்த காவலர்கள் உள்ளே சென்று பார்த்த போது, குண்டலப்புலியூர் ஆசிரமத்தில் இருந்து இங்கு  தங்க வைக்கப்பட்டிருந்த, 4 பேரை காணவில்லை என்பதும், அவர்கள் கதவை உடைத்து தப்பி சென்றதும் தெரியவந்தது. புகாரின்படி கடலூர் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் கடலூர் ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த ஒருவர் மீட்கப்பட்டார். மற்ற 3 பேரையும் தேடி வருகின்றனர்.

மாற்றுத்திறனாளிகள் அலுவரிடம் விசாரணை: ஆசிரமம் அரசு அனுமதி இன்றி விதிமுறைகளை மீறி இயங்கி வந்ததால் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் தங்கவேலு நேற்று விழுப்புரம் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார். அவரிடம் சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்தும், நடந்த சம்பவங்கள் குறித்தும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி எழுத்து பூர்வமான அறிக்கையை பெற்றனர். மேலும் அவர் கடந்த 10ம் தேதி நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட பல்வேறு ஆவணங்களையும் ஒரு மூட்டையில் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தார்.   

* ரேஷன் அரிசி பதுக்கல்

குண்டலப்புலியூர் ஆசிரமத்தில் விழுப்புரம் குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்ற புலனாய்வு துறை டிஎஸ்பி மனோகர் தலைமையிலான குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். அதில் 15 மூட்டைகளில் சுமார் 600 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. ரேஷன் அரிசி அன்பளிப்பாக பெறப்பட்டதா? அல்லது கடத்தல்காரர்களிடமிருந்து பெறப்பட்டதா? என்பது குறித்து விசாரனை செய்து வருகின்றனர்.

* கலெக்டர், எஸ்.பி. பதிலளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு

ஆசிரமம் விவகாரம் வழக்கை சிபிசிஐடி போலீசார் தீவிரமாக விசாரித்து வரும் நிலையில், பத்திரிகைகளில் வந்த செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துள்ளது. எனவே இச்சம்பவம் தொடர்பாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி. விசாரணை செய்து 6 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: