×

85 சதவீத தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் 15% வாக்குறுதிகள் விரைவில் நிறைவேற்றப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: ‘85% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம். எஞ்சிய 15% வாக்குறுதிகள் விரைவில் நிறைவேற்றப்படும்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு இல்லத்திருமண விழா நேற்று நடந்தது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து திருமணத்தை நடத்தி வைத்து பேசியதாவது: உங்களால் உருவாக்கப்பட்ட, உங்கள் நம்பிக்கைக்குரிய ஆட்சியாக இருந்து வரும் இந்த ஆட்சியானது, தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி வருகிறது.

முழுமையாக அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டு விட்டன என்ற தவறான புள்ளி விவரத்தை இங்கே பதிவு செய்ய விரும்பவில்லை. முத்தரசன் குறிப்பிட்டது போன்று 5 வருட கால ஆட்சியாகும். எனவே மிச்சமுள்ள வாக்குறுதிகளையும் இந்த அரசு நிறைவேற்றும் ஆட்சியாக தான் இருக்கும். ஏனென்றால் உங்களால் நம்பக்கூடிய முதல்வராக இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உள்ளேன் என்பதை மறந்து விடக்கூடாது. மேட்டூர் அணை முன்கூட்டியே திறப்பு காரணமாக விவசாயிகள் பயனடைந்தது குறித்து முத்தரசன் குறிப்பிட்டார். 20ஆண்டுகால புரட்சிக்கு வித்திடும் வகையில் நெஞ்சை நிமிர்த்தி சொல்லும் வகையில் விவசாயிகளின் நலனுக்காக இந்த ஆட்சி செயல்பட்டு வருகிறது.

விவசாயிகளுக்கு உறுதியான ஆட்சி என்பதை நிரூபிக்கும் வகையில் மழையில் நெல் சேதம் அடைவதை தடுக்கும் வகையில், ரூ.106 கோடி மதிப்பில் 106 நெல் சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட்டு காணொலி காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்டது. அவ்வாறு திறக்கப்பட்ட திருவாரூர் கிடங்கில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதேபோல கள ஆய்வில் முதல்வர் என்ற திட்டமும் நடத்தப்பட்டு வருகிறது. இதை ஏன் நான் சொல்கிறேன் என்றால் தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில், அவ்வாறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்யவும் சில வாக்குறுதிகள் சட்டப்பிரச்சனை மற்றும் நிதி காரணமாகவும், சில வாக்குறுதிகள் அதிகாரிகளின் மெத்தனம் காரணமாகவும் நிறைவேற்றப்படாமல் இருப்பதை இந்த கள ஆய்வில் தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுப்பதற்கு உறுதுணையாக இருந்து வருகிறது.

திடீர் மழை காரணமாக விவசாயம் பாதிக்கப்பட்டது தொடர்பாக வேளாண் மற்றும் உணவுத்துறை அமைச்சர்கள் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆய்வு செய்து அதற்கான கணக்கெடுப்பு முடிவுற்றுள்ள நிலையில், தற்போது அந்த கணக்கெடுப்பானது டேட்டா என்ட்ரி பதிவு செய்யப்பட்டு வருகிறது. மேலும் பாதிப்புகள் குறித்து ஒன்றிய அரசுக்கு கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது. அடுத்த ஒரு வார காலத்திற்குள் விவசாயிகளுக்கான நிவாரணத் தொகை அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன். இதை ஏன் நான் கூறுகிறேன் என்றால் தேர்தல் நேரத்தில் அறிவித்த எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்து வருகிறார்.

எந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை? ஏதோ நிதி பற்றாக்குறை காரணமாக ஒன்றிரண்டு திட்டங்கள் வேண்டுமானால் நிறைவேற்றப்படாமல் இருக்கலாம். நீங்கள் கஜானாவை காலி செய்து வைத்துவிட்டு சென்றது மட்டுமின்றி கடன் சுமையையும் வைத்துவிட்டு சென்றீர்கள். இந்த நிலையினை சமாளிப்பதே எங்களுக்கு பெரும் சவாலாக இருந்தது. அவ்வாறு சமாளித்து ஓரளவு மீண்டு வந்துள்ள நிலையில், 85 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு 15 சதவீதம் வாக்குறுதிகள் மட்டுமே எஞ்சி உள்ளது. அதையும் விரைவில் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் நிறைவேற்றுவேன் என்பதை உங்களுக்கு நம்பிக்கையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த வகையில் நம்பிக்கையுடன் இந்த ஆட்சிக்கு உறுதுணையாக இருக்குமாறு உங்களை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் பேசினார்.

* காரை நிறுத்தி விவசாயிகளிடம் மனுவை பெற்ற முதல்வர்
திருவாரூர் மாவட்டத்தில் 2 நாள் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வழியாக திருச்சி விமான நிலையத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்று கொண்டிருந்தபோது, ஒக்கநாடு கீழையூர் பகுதியில் சாலை ஓரத்தில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் காத்திருந்தனர். அவர்களை பார்த்த முதல்வர், காரை அங்கு நிறுத்தி விவசாயிகளை சந்தித்தார். அப்போது அவர்கள் இறவை பாசன திட்டத்தை செயல்படுத்த கோரி கொடுத்த மனுவை முதல்வர் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து ஒரத்தநாடு அண்ணா சிலை அருகே அனைத்து மக்களும் வழங்கிய மனுக்களை பெற்று கொண்ட முதல்வர், மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்படும் என்றார். முன்னதாக நேற்று காலை திருவாரூர் சன்னதி தெரு இல்லத்தில் இருந்து புறப்பட்டபோது வீட்டின் முன்பு கூடியிருந்த பொதுமக்களை பார்த்து மகிழ்ச்சியுடன் கையசைத்ததுடன், அவர்களிடம் கோரிக்கை மனுக்களையும் முதல்வர் பெற்றுக்கொண்டார். மேலும் திருவாரூரிலிருந்து மன்னார்குடி வரை 30 கிலோ மீட்டர் தூரத்திற்கும் சாலையின் இருபுறமும் பொதுமக்கள் திரண்டு முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். அவர்களிடமும் மனுக்களை பெற்றார்.

Tags : Chief Minister ,MK Stalin , We have fulfilled 85% of our election promises, 15% of our promises will be fulfilled soon: Chief Minister MK Stalin's speech
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து...