×

போலீசாரை கத்தியால் வெட்டி தப்பிக்க முயன்ற பிரபல ரவுடி மீது பெண் போலீஸ் எஸ்ஐ துப்பாக்கிச்சூடு: திருச்சியை தொடர்ந்து சென்னையிலும் அதிரடி நடவடிக்கை

சென்னை: சென்னை அயனாவரம் பகுதியில் வாகன சோதனையின்போது, உதவி ஆய்வாளரை இரும்பு கம்பியால் தாக்கிய வழக்கில், பல்வேறு திருட்டு சம்பவங்களில் தொடர்புடைய ரவுடியை பிடிக்க சென்றபோது, காவலர்களை கத்தியால் வெட்டிய ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் சங்கர் (49). இவர், அயனாவரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த திங்கட்கிழமை அன்று இரவு பணியில் இருந்தார். அப்போது, அதிகாலை 4 மணியளவில் அயனாவரம் குன்னூர் நெடுஞ்சாலை பகுதியில், அயனாவரம் பழைய காவல் நிலையம் எதிரே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அவருடன் அன்பரசி உள்ளிட்ட 4 பெண் போலீசார் உடனிருந்தனர்.

அப்போது, ஐசிஎப் பகுதியில் இருந்து, 3 பேருடன் பல்சர் பைக் ஒன்று அதிவேகமாக வந்தது. இதனால், வாகன சோதனையில் ஈடுபட்ட உதவி ஆய்வாளர் சங்கர் அந்த வாகனத்தை மடக்க முயற்சி செய்தபோது, பைக் பின்னால் அமர்ந்து இருந்த நபர், தான் வைத்திருந்த இரும்பு கம்பியால் ஓங்கி சங்கர் தலையில் அடித்து விட்டு தப்பிச் சென்றார். இதில், தலையில் பலத்த காயமடைந்த சங்கர் சம்பவ இடத்திலேயே சுருண்டு கீழே விழுந்தார். போலீசாரை தாக்கியவர்கள் அயனாவரம் சிக்னல் நோக்கி  சென்றுவிட்டனர்.

பின்னர், காயமடைந்த உதவி ஆய்வாளர் சங்கரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து அயனாவரம் போலீசார் நடத்திய சிசிடிவி கேமரா பதிவில்,  வாகனத்தில் வந்தவர்கள் பயன்படுத்தியது,  கடைகளின் பூட்டை உடைக்க பயன்படுத்தும, ‘கவ் பார்’ இரும்பு கம்பி என்பது தெரியவந்தது. மேலும், இவர்கள் அயனாவரம் பகுதியில் 3 கடைகளின் பூட்டை உடைத்து, அதில் ஒரு கடையில் மட்டும் ரூ.20 ஆயிரத்தை திருடி சென்றதும் தெரியவந்தது. இந்நிலையில், உதவி ஆய்வாளரை தாக்கியவர்களை பிடிக்க உதவி கமிஷனர் ஜவகர் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டது.

இதனையடுத்து, போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து நடத்திய விசாரணையில், உதவி ஆய்வாளர் சங்கர் வாகன தணிக்கை சோதனையில் ஈடுபட்டிருக்கும்போது, கவுதம் என்பவர் பைக்கை ஓட்டி வந்ததும், அவர் பின்னால் சூர்யா (எ) பெண்டு சூர்யா, அஜித் ஆகிய 3 பேரும் பைக்கில் வந்து காவல் உதவி ஆய்வாளர் சங்கரை இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு தப்பி சென்றதும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, பெண் காவல் உதவி ஆய்வாளர் மீனா தலைமையில், தலைமை காவலர் அமானுதீன், காவலர்கள் சரவணன் மற்றும் திருநாவுக்கரசு ஆகியோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கவுதம் மற்றும் அஜித் ஆகிய 2 பேரையும் நேற்று முன்தினம் காலை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் காவலரை தாக்கியது சூர்யா என்பது தெரிந்தது. மேலும், அவர்கள் கொடுத்த தகவலின்பேரில், பெண்டு சூர்யா திருவள்ளூர் மாவட்டத்தில் அவரது அக்கா புஷ்பா என்பவரின் வீட்டில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்பெயரில், பெண் உதவி ஆய்வாளர் மீனா தலைமையிலான 4 பேர் கொண்ட தனிப்படை போலீசார் திருவள்ளுவர் மாவட்டம் விரைந்து சென்று, பென்டு சூர்யாவை நேற்று முன்தினம் இரவு கைது செய்து, சென்னை அயனாவரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து கொண்டிருந்தனர்.

அயனாவரம் நியூ ஆவடி சாலையில் அமைந்துள்ள ஆர்டிஓ அலுவலகம் அருகே வரும்போது, பெண்டு சூரியா தனக்கு சிறுநீர் கழிக்க வேண்டும் என்று கேட்க, இதற்காக வாகனத்தை ஓரமாக நிறுத்தியபோது, அங்கிருந்து பெண்டு சூரியா தப்பி ஓடி உள்ளார். அப்போது தலைமை காவலர் அமுனுதீன், காவலர்கள் சரவணன், திருநாவுக்கரசு ஆகியோர் பெண்டு சூர்யாவை பிடிப்பதற்காக துரத்தி சென்றுள்ளனர். உடனே பெண்டு சூர்யா அங்கிருந்த ஒரு கரும்பு ஜூஸ் கடையில் இருந்த கத்தியை எடுத்து காவலர்களை தாக்கி, தப்பிச்செல்ல முயன்றார்.

இந்த தாக்குதலில் அயனாவரம் தலைமை காவலர் அமானுதீன், தலைமைச் செயலக காலனி காவல் நிலைய காவலர் சரவணகுமார் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட பெண்டு சூர்யாவை பிடிப்பதற்காகவும், காவலர்களை பாதுகாக்கவும், உதவி ஆய்வாளர் மீனா தான் வைத்திருந்த துப்பாக்கியால் பெண்டு சூர்யாவின் முழங்கால் பகுதியில் சுட்டு அவரை பிடித்தனர். இதில், அவருக்கு இடது முட்டியில் குண்டு பாய்ந்து, கீழே விழுந்தார். சூர்யாவை மீட்டு, போலீசார் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு, அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு முட்டியிலிருந்த குண்டு நீக்கப்பட்டது. அதுமட்டுமின்றி இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த  காவலர்களான அமானுதீன், சரவணகுமார் ஆகியோர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சம்பவம் நடைபெற்ற நியூ ஆவடி சாலை ஆர்டிஓ அலுவலகம் எதிரே உள்ள கரும்பு ஜூஸ் கடை அருகில் காவல் துறையின் தடயவியல் நிபுணர்கள் மற்றும் கைரேகை நிபுணர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து தடயங்களை சேகரித்து சென்றுள்ளனர். சம்பவம் அறிந்து கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் கோபி, அயனாவரம் உதவி கமிஷனர் ஜவகர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து, பின்னர் கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு சென்று குண்டடிபட்ட சூர்யாவிடம் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், தாக்குதலுக்கு உள்ளான காவலர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பெண்டு சூர்யா மீது புளியந்தோப்பு, அயனாவரம், திருவிக நகர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை முயற்சி, செல்போன் மற்றும் தங்க சங்கிலி பறிப்பு உள்ளிட்ட 14 வழக்குகள் நிலுவையில் உள்ளதும், இதில் பெரும்பாலான வழக்குகள் திருட்டு வழக்குகள் என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சியில் இரு நாட்களுக்கு முன்னர் போலீசார் ரவுடி மீது துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். தற்போது சென்னையிலும் ரவுடி மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

* இரண்டு முறை சுட்ட மீனா
சம்பவம் நடைபெற்ற இடத்தில் காவலர்களை சூர்யா தாக்கும்போது தற்காப்பிற்காக மீனா முதலில் வானத்தை நோக்கி சுட்டு சூர்யாவை சரண்டர் ஆகும்படி எச்சரித்தார். ஆனால், அவர் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து தப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டதால், இரண்டாவது முறையாக இடுப்புக்கு கீழே சுட்டார். இதில் இடது கால் முட்டியில் குண்டு பாய்ந்து சூர்யா கீழே விழுந்தார். உதவி ஆய்வாளர் மீனா 9 எம்எம் பிஸ்டலை பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

* யார் இந்த மீனா
ரவுடி சூர்யாவை சுட்ட உதவி ஆய்வாளர் மீனா 2016ம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்தவர். இவர், கடந்த சில ஆண்டுகளாக தலைமை செயலக காலனி குடியிருப்பு காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணியாற்றி வந்தார். தற்போது, அயனாவரம் உதவி கமிஷனர் ஜவகரின் தனிப்படை போலீசில் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சவ ஊர்வலத்தில் சேவல் சண்டை நடந்தது. அதனை தட்டிக்கேட்டபோது, மீனா மற்றும் தலைமை காவலர் திருநாவுக்கரசு ஆகியோர் தாக்கப்பட்டனர். இதில், உதவி ஆய்வாளர் மீனாவுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

* 7வது சம்பவம்
அயனாவரம் பகுதியில் காவலர்கள் அடி வாங்கும் சம்பவங்கள் தொடர்ந்து அறங்கேறி வருகின்றன. அந்தவகையில் நுண்ணறிவு பிரிவு காவலர் கருப்பய்யா, பிரசாந்த், பிரகாஷ், மீனா மற்றும் திருநாவுகரசு கடைசியாக தற்போது அடி வாங்கிய உதவி ஆய்வாளர் சங்கர் என அயனாவரம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த 7 பேர், இதுவரை அடிவாங்கி உள்ளனர். இதில், மற்ற சம்பவங்களில் எதிரிகள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது ரவுடி சூர்யாவை போலீசார் துப்பாகியால் சுட்டு பிடித்துள்ளனர்.

* இரண்டாவது என்கவுன்டர் மிஸ்சிங்
கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி பிரபல ரவுடி சங்கர் என்பவரை அப்போதைய அயனாவரம் இன்ஸ்பெக்டர் நட்ராஜ், தற்போது சம்பவம் நடந்த அதே நியூ ஆவடி சாலையில் வைத்து என்கவுன்டர் செய்தார். மீண்டும் 2 ஆண்டுகள் கழித்து அதே இடத்தில் ரவுடி சூரியாவை போலீசார் சுட்டு பிடித்தது குறிப்பிடத்தக்கது.

* சென்னை கமிஷனர் விசாரணை
ரவுடி சூர்யா நேற்று தப்பி செல்லும்போது, காவலர்கள் சரவணகுமார் மற்றும் அமானுதீன் ஆகியோரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றார். அவர்கள் 2 பேரும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை, சென்னை காவல் ஆணையர் சங்கர்ஜிவால், தெற்கு கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா ஆகியோர் நலம் விசாரித்தனர். பின்னர், தெற்கு கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா கூறுகையில், ரவுடி சூர்யா 2 காவலர்களை கத்தியால் வெட்டிவிட்டு தப்பிக்க முயன்றபோது, உதவி ஆய்வாளர் மீனா தனது துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி சுட்டுள்ளார், அதை கேட்காமல் ரவுடி சூர்யா, காவலர்களை வெட்டிவிட்டு தப்பிக்க முயன்றதால், அவரது காலில் சுட்டு பிடித்துள்ளார். ரவுடி சூர்யா மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் உள்ளதால், தொடர்ந்து இதுகுறித்து விசாரணை செய்து வருவதாகவும், காயமடைந்த காவலர்கள் நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.

Tags : SI ,Chennai ,Trichy , Woman police SI shot at famous rioter who tried to escape with a knife: After Trichy, action in Chennai too
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...