×

இரண்டரை மாத இழுபறிக்கு பின் டெல்லி மேயர் பதவியை கைப்பற்றியது ஆம்ஆத்மி: 15 ஆண்டுகளுக்கு பின் பாஜ தோல்வி

புதுடெல்லி: இரண்டரை மாதமாக நீடித்த மோதலுக்குப் பிறகு, நேற்று நடைபெற்ற டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் ஷெல்லி ஓபராய் வெற்றி பெற்றார். அவர் பாஜ வேட்பாளர் ரேகா குப்தாவை 34 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். டெல்லி மாநகராட்சி தேர்தல் கடந்த ஆண்டு டிசம்பர் 4ம் தேதி நடந்தது. அதில், ஆம் ஆத்மி கட்சி 134 இடங்களில் வெற்றி பெற்று அதிகாரத்தை கைப்பற்றியது. 15 ஆண்டுகளாக டெல்லி மாநகராட்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த பாஜ, 104 இடங்களை பிடித்து தோற்றது. மூன்று முறை மேயர் தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. எனினும், மூன்று முறை மாநகராட்சி கூட்டம் கூடிய போதும் ஆளுநரால் நியமிக்கப்பட்ட 10 நியமன உறுப்பினர்களுக்கு மேயர் தேர்தலில் வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டதால் ஆம் ஆத்மி, பாஜ இடையே மோதல் வெடித்து  தேர்தல் நடத்தப்படாமல் ஒத்திவைக்கப்பட்டன.  

இதைத் தொடர்ந்து, ஆம் ஆத்மியின் மேயர் வேட்பாளர் ஷெல்லி ஓபராய், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, ‘நியமன உறுப்பினர்கள் மேயர் தேர்தலில் வாக்களிக்க முடியாது. மேயர் தேர்தலை உடனே நடத்தி முடிக்க வேண்டும்,’ என  தீர்ப்பில் கூறினர். அதன்படி நேற்று மேயர் தேர்தல் நடந்தது. இதில், மொத்தம் 266 வாக்குகள் பதிவாகின. அவற்றில் ஆம் ஆத்மியின் ஷெல்லி ஓபராய் 150 வாக்குகளை பெற்று வென்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ரேகா குப்தா 116 வாக்குகளை பெற்றார். துணை மேயர் பதவியையும் ஆம்ஆத்மி வேட்பாளர் முகமது இக்பால் கைப்பற்றினார்.


Tags : Aam Aadmi Party ,Delhi Mayor ,BJP , Aam Aadmi Party wins Delhi Mayor post after two-and-a-half months of tussle: BJP's defeat after 15 years
× RELATED நேற்று மாலை முதல் எரிகிறது; டெல்லி...