ஷில்லாங்: பாஜவுக்கு உதவுவதற்காகவே மேகாலயா தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் போட்டியிடுகிறது என ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். மேகாலயாவில் வரும் 27 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மாநிலத்தில் பரப்புரை மேற்கொண்டார். ஷில்லாங்கில் நேற்று நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: பாஜ-ஆர்எஸ்எஸ் அமைப்பு தங்களுக்குதான் எல்லாம் தெரியும், எல்லாவற்றையும் புரிந்து கொள்ள முடியும் என நினைக்கிறது. அதனால், யாரையும் மதிக்காமல் அவர்கள் செயல்படுகின்றனர். அவர்களை எதிர்த்து அனைவரும் ஒன்றாக போராட வேண்டும். தமிழ்நாடு, கர்நாடகா, ஜம்மு காஷ்மீர் அல்லது அரியானா என ஒவ்வொரு மாநிலமும் ஆர்எஸ்எஸ்சால் தாக்கப்படுகிறது.
அனைத்து மாநிலங்களிலும் ஒரே யோசனை திணிக்கப்படுகிறது. நாடாளுமன்றம், ஊடகங்கள், அதிகாாிகள், தேர்தல் ஆணையம், நீதித்துறை என இந்தியாவில் உள்ள ஒவ்வொரு அமைப்பும் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜ கொடுக்கும் அழுத்தங்களால் பாதிக்கப்படுகிறது. மேகாலயாவின் தனித்துவமான மொழி, மதம், கலாச்சாரம் மற்றும் வரலாறு ஆகியவற்றுக்கு பாஜ தீங்கு விளைவிப்பதை காங்கிரஸ் அனுமதிக்காது. இந்தப் போராட்டத்தில் நாங்கள் உங்களுடன் நிற்கிறோம் என்பதை உங்களுக்குச் சொல்ல நான் இங்கு வந்துள்ளேன். பாஜவின் சித்தாந்தம் உங்கள் கலாச்சாரம், உங்கள் பாரம்பரியம், உங்கள் மதம் மற்றும் உங்கள் வரலாற்றைக் கெடுக்க அனுமதிக்கப் போவதில்லை.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வரலாறு உங்களுக்கு தெரிந்திருக்கும். மேற்கு வங்கத்தில் நடந்த வன்முறையும் தெரிந்திருக்கும். அந்த கட்சியின் பாரம்பரியத்தை அறிந்திருப்பீர்கள். அவர்கள் பாஜ வெற்றி பெற உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் பெருமளவு பணத்தை செலவு செய்து கோவா சட்டபேரவை தேர்தலில் போட்டியிட்டனர். பாஜவுக்கு உதவ வேண்டும் என்பது தான் அவர்களின் திட்டம். அதே போல் மேகாலயாவிலும் பாஜவை வெற்றி பெற செய்ய திரிணாமுல் போட்டியிடுகிறது. இவ்வாறு அவர் பேசினார். * 100 மோடி, அமித்ஷா வந்தாலும் 2024ல் காங்கிரஸ் ஆட்சி தான்நாகாலாந்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்க்கே பேசியதாவது: இந்த நாட்டை காக்கும் ஒரே மனிதர் நான்தான். வேறு யாரும் என்னைத் தொட முடியாது என மோடி பல முறை கூறி இருக்கிறார். எந்த ஜனநாயக மனிதனும் இதைச் சொல்வதில்லை, நீங்கள் ஜனநாயகத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் ஒரு சர்வாதிகாரி இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நீங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், மக்கள் உங்களுக்கு பாடம் புகட்டுவார்கள். 2024ல் மத்தியில் கூட்டணி ஆட்சி வரும். காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமையும். மற்ற கட்சி காணாமல் போய்விடும். ஒவ்வொரு கட்சியுடனும் இப்போது நாங்கள் பேசி வருகிறோம். நாங்கள் எங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறோம். 100 மோடி அல்லது ஷா வந்தாலும் பாஜவுக்கு பெரும்பான்மை கிடைக்காது. மற்ற அனைத்து கட்சிகளுடன் சேர்ந்து, நாங்கள் பெரும்பான்மை பெறுவோம். இவ்வாறு அவர் பேசினார்.