×

தேர்தல் வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றிவிட்டோம்: இல்லத்திருமான விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

திருவாரூர்: தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கும் ஆட்சி உங்களால் உருவாக்கப்பட்ட ஆட்சி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கோ.பாலுவின் இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,

இந்த மணவிழா நிகழ்ச்சிக்கு தலைமைப் பொறுப்பை ஏற்று மணவிழாவை நடத்தி வைத்து அதே நேரத்தில், மணமக்களை வாழ்த்தக்கூடிய ஒரு சிறப்பான வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. வாய்ப்பைப் பெற்றமைக்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

நேற்றும், இன்றும் இரண்டு நாட்களாக திருவாரூர் மாவட்டத்தில், நம்ம திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடிய ஒரு சுற்றுப்பயணத்தை நான் நடத்திக் கொண்டிருக்கிறேன். நான் தமிழகத்தினுடைய முதலமைச்சராக பொறுப்பேற்றதற்கு பின்னால் எத்தனையோ மாவட்டங்களுக்கு, எத்தனையோ பகுதிகளுக்கு, ஏன் எத்தனையோ மாநிலங்களுக்கு, ஏன் சில வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புக்கள் எல்லாம் நான் பெற்றதுண்டு.

அப்படிப்பட்ட வாய்ப்பை பெறுகிறபோது, எனக்கு ஏற்படாத மகிழ்ச்சி, பெருமை, பூரிப்பு, புலங்காகித உணர்வு, இந்த இரண்டு நாட்களாக, திருவாரூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறபோது, என்னையே அறியாமல் ஒரு கம்பீரமாக நான் இங்கே நின்று கொண்டிருக்கிறேன்.

நம்முடைய தலையாமங்கலம் பாலு அவர்கள் பேசுகிறபோது சொன்னார், உணர்ச்சியோடு இருக்கிறேன் பேசமுடியவில்லை என்று. அதேநிலைதான் இப்போது எனக்கு. இரண்டு நாட்களாக மக்கள் ஆர்வத்தை, மக்களுடைய எழுச்சியை, தந்த வரவேற்பை நான் பார்க்கிறபோது, நானும் பேசமுடியாமல் உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன்.

நம்முடைய சகோதரர் தலையாமங்கலம் பாலு பேசுகிறபோது சொன்னார், பேசுவதற்கு வாய்ப்பில்லாமல் போய்விடுமோ என்ற அச்சத்தின் காரணமாகத்தான் முன்னால் ஒரு நன்றி தெரிவித்து, ஒரு போர்டு வைத்திருக்கிறேன். அப்படி சொன்னதை படித்துக் காண்பித்தார். வந்தவுடனே, நானும் அதை படித்தேன். அவர் பேசுகிறபோதும் குறிப்பிட்டுச் சொன்னார். நீங்கள் வந்தது எனக்கு பெருமை. என்னைப் பெருமைப்படுத்தியிருக்கிறீர்கள்.

தலையாமங்கலம் பாலு அவர்களின் இல்லத்தில் நடைபெறுகிற திருமணத்திற்கு வருவதுதான் என்னுடைய தலையாய கடமை. நீங்கள் எல்லாம் எந்த அளவுக்கு மகிழ்ச்சி அடைகிறீர்களோ, அதைவிட பல மடங்கு மகிழ்ச்சியை இப்போது நான் அடைந்திருக்கிறேன். அந்த பூரிப்போடு, அந்த உணர்வோடுதான் இந்த நிகழ்ச்சிக்கு நான் வந்திருக்கிறேன்.

இந்த திருமணத்தைப் பொறுத்தவரைக்கும், பொதுவாக நான் சீர்திருத்தத் திருமணம் நடக்கின்றபோது, ஒரு செய்தியை தவறாமல், வரலாற்றில் பதிவாகியிருக்கிற ஒரு செய்தியை தவறாமல் எடுத்துச் சொல்வதுண்டு. அதை மக்கள் நன்றாக மனதில் ஆழமாக பதிய வைக்க வேண்டும் என்பதற்காக நான் தொடர்ந்து சொல்வதுண்டு.

இதுபோன்ற சீர்திருத்தத் திருமணங்கள் 1967-க்கு முன்பு நடைபெறும் என்று சொன்னால், அந்தத் திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற அங்கீகாரத்தை அன்றைக்கு நாம் பெற்றிருக்கவில்லை. ஆனால், 1967ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, முதன்முதலாக திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து ஆட்சியின் தலைவனாக தமிழக முதல்வராக அறிஞர் அண்ணா பொறுப்பேற்றுக் கொண்டு, முதலமைச்சராக, பொறுப்பேற்ற அண்ணா முதன்முதலாக சட்டமன்றத்தில் உள்ளே நுழைந்து அவர் கொண்டு வந்த தீர்மானம் தான் சீர்திருத்தத் திருமணங்கள் அனைத்தும் செல்லுபடியாகும் என்ற சட்டத்தை சட்டமன்றத்தில் கொண்டு வந்து ஏகமனதாக நிறைவேற்றி தந்தார்கள்.

ஆகவே, இன்றைக்கு நடைபெற்றிருக்கக்கூடிய இந்த சீர்திருத்தத் திருமணம் சட்டப்படி, முறைப்படி செல்லுபடியாகும் என்கிற அங்கீகாரத்தோடு நடந்தேறியிருக்கிறது. இதுதான் வரலாறு. இது சீர்திருத்தத் திருமணம் மட்டுமல்ல, சுயமரியாதையோடு நடைபெறக்கூடிய திருமணம் மட்டுமல்ல, இது ஒரு தமிழ்த் திருமணம்.

எந்தத் தமிழுக்காக, நம்முடைய இயக்கம் பாடுபட்டிருக்கிறதோ, தியாகங்கள் புரிந்திருக்கிறதோ, அந்தத் தமிழை செம்மொழி ஆக்கிடவேண்டுமென்று குரல் கொடுத்து, நம்முடைய தாய்மொழியாக இருக்கக்கூடிய இந்த அழகு தமிழ் மொழிக்கு செம்மொழி என்கிற அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்த தலைவரும் நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள்தான் என்பதை நாம் மறந்துவிட முடியாது.

அப்படிப்பட்ட அழகு தமிழ்மொழியில் இந்தத் திருமணம் நடந்தேறியிருக்கிறது. அப்படிப்பட்ட இந்த திருமணத்தில்,  உங்களோடு சேர்ந்து நானும் பங்கேற்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இங்கே பேசிய நம்முடைய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மாநிலச் செயலாளர் தோழர் முத்தரசன் அவர்களும், அதேபோல மற்றவர்களும் பேசுகிறபோது குறிப்பிட்டுச் சொன்னார், ஒரு சிறப்பான ஆட்சி.

திராவிட மாடல் ஆட்சி. மக்கள் போற்றக்கூடிய ஆட்சி, இந்தியாவே வியந்து பார்க்கக்கூடிய ஒரு ஆட்சி, மற்ற மாநிலங்கள் தங்களுடைய மாநிலங்களில் பின்பற்றக்கூடிய அளவிற்கு ஒரு ஆட்சி இன்றைக்கு தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது என்று பெருமையோடு எடுத்துச் சொன்னார்கள்.

நான் ஏற்றுக்கொள்கிறேன். இப்படிப்பட்ட ஒரு உன்னதமான ஆட்சி உருவாக பாடுபட்டு, பணியாற்றியிருக்கக்கூடிய அந்தக் கழக செயல்வீரர்கள் பட்டியலில் ஒருவராக விளங்கிக் கொண்டிருக்கக்கூடியவர்தான் நம்முடைய தலையாமங்கலம் பாலு அவர்கள் என்பதையும் நான் இங்கே மறந்துவிட முடியாது.

அப்படிப்பட்ட உழைப்பை உழைத்து ஒரு தீரராக அவர் இன்றைக்கு நம்மிடத்தில் வளம் வந்து கொண்டிருக்கிறார். அவரைப் பொறுத்தவரைக்கும், அவரே இங்கே பேசுகிறபோது சொன்னார். இனி எந்தப்பதவியையும் நான் கேட்கமாட்டேன். நீங்கள் கேட்காவிட்டாலும், நாங்கள் கொடுக்கமாட்டோம் என்று சொல்லவில்லையே.

அவர் ரொம்ப ஜாக்கிரதையாகச் சொன்னார். நீங்கள் கொடுத்தாலும் வாங்கமாட்டேன் என்று சொல்லியிருக்க வேண்டும். கேட்கமாட்டேன் என்றுதான் சொன்னார், அதுதான் கேட்காமலேயே கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை அவருக்கு இருக்கிறது.

அவர் ஏற்கனவே பல்வேறு பொறுப்புக்களில் கட்சிப் பொறுப்பாக இருந்தாலும் சரி, மக்களுக்கு ஆற்றக்கூடிய பொறுப்புக்களாக இருந்தாலும், ஊராட்சி மன்றத் தலைவராக, ஒன்றிய பிரதிநிதியாக, சோழ பாண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவராக, ஒருங்கிணைந்த மன்னார்குடி ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினராக, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினராக, ஒருங்கிணைந்த ஒன்றியக் குழு செயலாளராக, தலைமைச் செயற்குழு உறுப்பினராக, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவராக,  பட்டியலில் எழுதி வைத்துவிட்டுத்தான் நான் சொல்ல வேண்டியிருக்கிறது.

இவ்வளவு பதவிகள் வகித்த பிறகு, மறுபடியும் பதவியா? உங்களுக்கு. அந்த எண்ணம் அவருக்கு வந்திருக்கிறது. இது போதும் என்கிற எண்ணம் எங்களுக்கு வரவேண்டும். அப்போதுதான் நாங்கள் நிறுத்துவோம். அதுவரைக்கும் உங்களுக்கு தேடிவரக்கூடிய பதவிகள் என்பது நீங்கள் நாடுகிறீர்களோ இல்லையோ, உங்களை தேடி வருகிற அளவிற்கு உங்கள் பணிகள் இருக்கிறது என்பதற்காகத்தான் உங்களை நாடி வருகிறது.  அப்படிப்பட்ட ஒரு சிறந்த செயல்வீரராக விளங்கிக் கொண்டிருக்கக்கூடியவர் நம்முடைய தலையாமங்கலம் பாலு.

நம்முடைய முத்தரசன் அவர்கள் குறிப்பிட்டுச் சொன்னார். அவருடைய அன்பு மகள்களுக்கு அழகான தமிழ் பெயர்களை, அதுவும் உதயசூரியனைக் குறிக்கக்கூடிய வகையில் உதயா – சூர்யா, இரண்டு மகள்களுக்கு அழகாக தந்து பெயர் சூட்டி அவர் மகிழ்ந்திருக்கிறார்.

அதில் உதயா என்கிற இளைய மகளுக்கு இன்றைக்கு டாக்டர் துரையரசன் அவர்களை மணமகனாக கரம்பிடித்து இல்வாழ்க்கையை இன்றைக்கு அவர்கள் தொடங்கியிருக்கிறார்கள்.  அந்த இல்வாழ்க்கையை தொடங்கி வைக்கக்கூடிய இந்த விழாவில் கலந்து கொண்டு வாழ்த்த வந்திருக்கக்கூடிய உங்களையெல்லாம் நான் கேட்டுக் கொள்ள விரும்புவது, கடந்த ஏறக்குறைய இரண்டாண்டு காலமாக, தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கக்கூடிய ஆட்சி உங்களால் உருவாக்கப்பட்ட ஆட்சி, உங்களுடைய நம்பிக்கைக்குரிய ஆட்சியாக தேர்தல் நேரத்தில் அறிவித்திருக்கக்கூடிய திட்டங்களை எந்த அளவிற்கு நிறைவேற்றிக் காட்டியிருக்கிறோம், நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.

நாங்கள் அறிவித்த அத்தனை திட்டங்களையும் நிறைவேற்றிவிட்டோம் என்று ஒரு தவறான கருத்தை பதிவு செய்ய நான் விரும்பவில்லை. அதைத்தான் நம்முடைய முத்தரசன் அவர்கள் பேசுகிறபோது சொன்னார்.
ஐந்து வருடம் என்பதால் ஐந்து வருடம் பொறுத்திருங்கள் என்று சொல்லவரவில்லை. மீதம் இருக்கக்கூடிய திட்டங்களையும், விரைவில் நிறைவேற்றக்கூடிய ஆட்சியாகத்தான் இந்த ஆட்சி இருக்கும். காரணம், இன்றைக்கு உங்களை நம்பி, உங்கள் அன்போடு  இன்றைக்கு பொறுப்பேற்றிருக்கக்கூடிய முதலமைச்சர் யார் என்று கேட்டால், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது.

இங்கே நம்முடைய முத்தரசன் அவர்கள் பேசுகிறபோது சொன்னார். இன்றைக்கு விவசாயிகள் எந்த அளவிற்கு இந்த ஆட்சியில் பலன்பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். மேட்டூரிலிருந்து குறித்த காலத்திற்கு மேல் தண்ணீர் திறந்து விடுகின்ற காரணத்தினால், விவசாயிகளுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய நன்மைகளைப் பற்றியெல்லாம் அவர் எடுத்துச் சொன்னார்.

20 ஆண்டு காலம் இல்லாத ஒரு மிகப் பெரிய புரட்சி. நெஞ்சை உயர்த்தி சொல்லக்கூடிய அளவிற்கு இன்றைக்கு மிகப் பெரிய புரட்சி ஏற்பட்டிருக்கிறது. தேர்தல் நேரத்தில் சொன்னோம்.  விவசாயிகளுக்கென தனி பட்ஜெட் அறிவிக்கப்படும் என்று குறிப்பிட்டுச் சொன்னோம். ஆட்சிக்கு வந்தவுடனே நிதிநிலை அறிக்கையை வெளியிட்டு அதற்கடுத்தநாளே விவசாயிகளுடைய பட்ஜெட்டை வெளியிட்டோமா? இல்லையா? அதேபோல, இந்த ஆண்டும் நிதிநிலை அறிக்கை வெளியிட்ட பிறகு விவசாயிகளுக்கென்று தனி பட்ஜெட் வெளியிடப்படவிருக்கிறது.

எப்படி பட்ஜெட்டை திராவிட முன்னேற்றக் கழகம் வெளியிடுகிறபோதெல்லாம், கலைஞர் அவர்கள் ஐந்து முறை முதலமைச்சராக இருந்தபோதும் பட்ஜெட் எப்படி வெளியிட்டார், ஏதோ எடுத்தோம், கவிழ்த்தோம் என்று வெளியிடமாட்டார். யார், யாரை அழைத்து வணிகப் பெருமக்களா, விவசாயிகளா, தொழிலாளர்களா, தொழிலதிபர்களா, சிறு, குறு தொழில் நடத்தும் நிறுவனங்களா, அத்தனை அமைப்பினுடைய நிர்வாகிகளை அழைத்து, உட்கார வைத்து, கலந்து பேசி, எதற்கு வரி போடலாம், எதற்கு வரியை நீக்கலாம், என்ன சலுகை வழங்கலாம் என்று கேட்டு, விவாதித்து, அதற்குப் பிறகு ஒரு முடிவெடுத்து, அதற்கு பிறகுதான் நிதிநிலை அறிக்கையை அவர் ஐந்து முறை முதலமைச்சராக இருந்த போது அந்த முறையைத்தான் அவர் கடைபிடித்தார்.

அதே வழிநின்று, இன்றைக்கு நம்முடைய ஆட்சி, திராவிட மாடல் ஆட்சி, நிதிநிலை அறிக்கையை தயாரிப்பதற்கு முன்பு அதே பணியை நாங்கள் நிறைவேற்றியிருக்கிறோம். தொடர்ந்து, அதை இந்த ஆண்டும் நிறைவேற்ற இருக்கிறோம். அதேபோல விவசாயிகளுக்கென தனி பட்ஜெட் அறிவிக்கின்ற நேரத்தில்கூட நம்முடைய விவசாயத்தினுடைய அமைச்சர், உணவுத் துறை அமைச்சர், அந்த துறையினுடைய உயர் அதிகாரிகள், ஒவ்வொரு மண்டலமாகச் சென்று, விவசாய அமைப்புகளை எல்லாம் அழைத்து, உட்கார வைத்துப் பேசி, கலந்து, விவாதித்து, அதற்குப் பிறகுதான், விவசாயிகளுடைய தனி பட்ஜெட்டை அறிவித்தோம்.

அதேபோல இந்த ஆண்டும், நிதி நிலை அறிக்கை விவசாயிகளுக்கென்று அறிவிக்கப்படவிருக்கிறது. இப்போதும் அதே பணியைத்தான், அதே முறையைதான் கடைபிடிக்கவிருக்கிறோம். இன்றைக்கு விவசாயத்தைப் பொறுத்தவரைக்கும், ஒட்டுமொத்தமாக இந்தியாவில் கணக்கெடுத்துப் பார்த்தால், எப்படி, இந்தியா டுடே என்கின்ற ஆங்கிலப் பத்திரிகை முதலமைச்சர்களை வரிசைப்படுத்தி, ஒரு கணக்கெடுத்து, ஒரு கணிப்பு வெளியிட்ட நேரத்தில், முதலிடத்தில் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார் என்று ஒரு செய்தி ஆட்சிக்கு வந்தவுடனே ஓராண்டு காலத்தில் அந்த செய்தியை வெளியிட்டார்கள்.

அப்போது நான் சொன்னேன், இந்தியாவிலேயே முதல் முதலமைச்சர் என்கிற அந்த மதிப்பு எனக்கு வருவதைவிட, இந்தியாவிலேயே நம்முடைய தமிழ்நாடு தான் முதலிடம் என்ற அந்த நிலை வரவேண்டும், அதுதான் எனக்கு பெருமை என்று நான் சொன்னேன். அந்த நிலையை இந்த ஆண்டு கொண்டு வந்தோமா இல்லையா?  அதேபோல, விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை, பல்வேறு சலுகைகளை இன்றைக்கு வழங்கிக் கொண்டிருக்கக்கூடிய வகையில்தான் இந்த ஆட்சி நடைபோட்டுக் கொண்டிருக்கிறது.
    
கோட்டையில் கடந்த 11ஆம் தேதி, ரூபாய் 106 கோடியில் 106 நவீன நெல் சேமிப்பு கிடங்குகளை நான் காணொலி காட்சியின் மூலமாக திறந்து வைத்தேன். நேற்றைக்குக்கூட, திருவாரூரில் இருக்கக்கூடிய நெல் சேமிப்பு கிடங்கிற்கு ஆய்வுக்காக சென்றேன்.
    
அதேபோல, “கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற ஒரு புதிய திட்டத்தை அறிவித்து, இதுவரைக்கும் நாம் தேர்தல் அறிக்கையில் என்னென்ன சொல்லியிருக்கிறோம், என்னென்ன திட்டங்கள் நிறைவேறியிருக்கிறது. சில திட்டங்கள் சட்டரீதியாக, நிதி பிரச்சனையின் காரணமாக அல்லது அதிகாரியினுடைய மெத்தனத்தின் காரணமாக, சில பிரச்சனைகள் முடிவடையாத சூழ்நிலையில் இருக்கிறது என்பதை நேரடியாக தெரிந்து கொள்ள வேண்டும்.

அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று சொல்லி, அதற்காகத்தான் உருவாக்கப்பட்டது தான் “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டம். ஒவ்வொரு மண்டலமாக நான் சென்று கொண்டிருக்கிறேன். முதல் ஆய்வு வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்கள் அடங்கிய அந்த மாவட்டங்களைச் சார்ந்த அதிகாரிகளை அழைத்து, உட்கார வைத்து, இரண்டு நாட்கள் ஆய்வு நடத்தினேன்.

அதேபோல சட்டம், ஒழுங்கு பிரச்சனை பற்றி காவல்துறை அதிகாரிகளை எல்லாம் வைத்து ஆய்வு நடத்தினேன். அதற்கடுத்து, இரண்டாம் கட்டமாக கொங்கு மண்டலத்தில், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களை உள்ளடக்கி அந்த ஆய்வு நடத்தினேன்.

அதைத் தொடர்ந்து மூன்றாம் கட்டமாக வருகிற 5ஆம் தேதி மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கு ஆய்வுக்காக தேதி முடிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆய்வு நடத்தப் போகிறேன். அதேபோல தஞ்சை, திருவாரூருக்கு வரப் போகிறேன். எதற்காக இதை சொல்கிறேன் என்று சொன்னால், ஏதோ திட்டங்களை அறிவித்துவிட்டோம். அது நடந்துவிடும் என்று ஓய்வெடுத்து, நாங்கள் ஒதுங்கி, வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்.

அது எப்படி நடக்கிறது, ஏன் நடக்கவில்லை என்பதையும் கூர்ந்து, ஆய்ந்து கவனித்து, உரிய நடவடிக்கை எடுக்கக்கூடியவன் தான் இன்றைக்கு நீங்கள் பெற்றிருக்கக்கூடிய முதலமைச்சர் இந்த மு.க.ஸ்டாலின் என்பதை உறுதியோடு நான் சொல்ல விரும்புகிறேன். ஆகவே, இந்த நிலையில், ஒரு சிறப்பான ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம். இங்கே நம்முடைய தோழர் முத்தரசன் அவர்கள் பேசுகிறபோது, திடீரென பெய்த மழையால் ஏற்பட்ட சேதாரத்தைப் பற்றி எடுத்துச் சொன்னார்.  அதனால் விவசாயிகள் எந்த அளவிற்கு துன்பத்திற்கு, துயரத்திற்கு ஆளாக வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டது என்பதை நாம் மறுக்கவில்லை, மறைக்கவில்லை.

அதனால் தான் உடனடியாக ஈரோட்டில் இடைத்தேர்தல் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், தேர்தல் பணியில் சில அமைச்சர்கள் ஈடுபட்டிருந்தாலும், நமது உடனடி தேவை அங்கே பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய மக்களுக்கு நிவாரணம் வழங்கிடவேண்டும், விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

எனவே, உடனடியாக வேளாண்துறை அமைச்சர் அவர்களும், உணவுத்துறை அமைச்சர் அவர்களும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளோடு, பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் போன்ற மாவட்டங்களுக்கு நீங்கள் உடனடியாக செல்லவேண்டும் என்று உத்தரவிட்டு, உடனடியாக இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் செய்து பாதிக்கப்பட்ட இடங்களை எல்லாம் சென்று பார்த்தார்கள், விவசாயிகளிடத்தில் பேசினார்கள்.

நிவாரணம் என்ன வேண்டும் என்பதை பற்றி ஆய்வு நடத்தினார்கள். அதிகாரிகளோடு சென்று அந்த பணியை நிறைவேற்றினார்கள். அதற்கு பிறகு நான் ஒன்றிய அரசுக்கு நாம் முறையாக கடிதம் எழுதினோம். இப்போது என்ன நிலை? கணக்கெடுக்கக்கூடிய பணி தொடர்ந்து நடைபெற்று இப்போது data entry செய்ய தொடங்கிவிட்டார்கள். இப்போது சொல்கிறேன், இன்னும் ஒரு வாரத்தில், அந்த நிவாரணத் தொகை உங்கள் வங்கியில், உடனடியாக வரவு வைக்கப்படும் என்று உறுதியோடு நான் சொல் விரும்புகிறேன்.

எதற்காக நான் இதையெல்லாம் சொல்கிறேன் என்று கேட்டால், எந்தத் திட்டத்தை நிறைவேற்றவில்லை, தேர்தல் நேரத்தில் சொன்னதையெல்லாம் நிறைவேற்றவில்லை, நிறைவேற்றவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார். எதை நிறைவேற்றவில்லை. ஒன்று, இரண்டு நிறைவேற்றாமல் இருக்கக்கூடிய ஒரு சூழ்நிலை.

நிதி பற்றாக்குறை, நிதி மட்டும் முறையாக இருந்திருந்தால், அதை ஒழுங்காக நீங்கள் அதைப்பற்றி கவலைப்பட்டு, அதை ஒழுங்காக நீங்கள் சேர்த்து வைத்திருந்தால், கஜானாவில் நிதியை வைத்திருந்தால், நாங்கள் இந்நேரம் அதையும் நிறைவேற்றி இருப்போம். ஆனால் கஜானாவே காலியாக்கிவிட்டு பெரிய கடனாளியாக நீங்கள் சென்ற காரணத்தினால்தான் அதையும் சமாளிப்பதற்கு நாங்கள் மிகவும் சிரமப்பட்டோம்.

அதையெல்லாம் நாங்கள் சமாளித்து, ஓரளவிற்கு ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வந்திருக்கிறோம். 85 சதவீத பணியை நிறைவேற்றிவிட்டோம் என்று நான் தொடர்ந்து சொல்கிறேன். மிச்சம் இருக்கக்கூடிய அந்த 15 சதவீத பணிகளையும் விரைவில் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் நிறைவேற்றுவான் என்ற  நம்பிக்கையை இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி, அந்த நம்பிக்கையோடு நீங்கள் இருங்கள், அந்த நம்பிக்கையோடு நீங்கள் எப்போதும் இந்த ஆட்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று உங்களையெல்லாம் அன்போடு கேட்டுக்கொண்டு மணக்கோலம் பூண்டிருக்கக்கூடிய மணமக்கள் எப்படி நம்முடைய தலையாமங்கலம் பாலு  அவர்கள் ஒரு கொள்கை முடிவோடு, இலட்சிய உணர்வோடு, எந்தப் பிரச்சனைகள் வந்தாலும், எந்த சோதனைகள் வந்தாலும், அதையெல்லாம் ஏற்றுக்கொண்டு இந்த இயக்கத்திற்காக தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டிருக்கிறாரோ, அதே உணர்வை நம்முடைய மணமக்களும் பெறவேண்டும்.

எனவே, மணமக்கள் எல்லா வளமும் பெற்று வளமோடு வாழவேண்டும், புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லியிருக்கக்கூடிய வீட்டிற்கு விளக்காய், நாட்டிற்கு தொண்டர்களாய் இருந்து வாழுங்கள், வாழுங்கள், வாழுங்கள் என்று வாழ்த்தி, விடைபெறுகிறேன் இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

Tags : CM ,Stalin , We have fulfilled most of our election promises: CM Stalin's speech in absentia
× RELATED கடும் பனிப்பொழிவால் தஞ்சை பூ மார்க்கெட்டுக்கு மல்லிகை வரத்து குறைவு