×

கூட்டுறவு சங்க கட்டிடங்களின் பராமரிப்பு, பழுதுபார்ப்பு செலவுகளுக்கான உச்ச வரம்பு அதிகரிப்பு: கூட்டுறவு சங்க பதிவாளர் தகவல்

சென்னை: கூட்டுறவு சங்க கட்டிடங்களின் பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணிக்கான செலவுகளுக்கான உச்ச வரம்பு உயர்த்தி வழங்கப்படுவதாக கூட்டுறவு சங்க பதிவாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: கூட்டுறவுச் சங்கங்களுக்கு சொந்தமான கட்டிடங்களில் வருடாந்திர பராமரிப்பு, வெள்ளையடித்தல், வர்ணம் பூசுதல், மேல் தளத்தில் சிறிய ஒழுகங்களை நிறுத்த பழுது பார்த்தல் சிறிய பழுது பார்க்கும் பணிகள் மற்றும் இதர பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு செலவுகள் ஆகிய பணிகளுக்கு ஆகும் செலவினங்களை, தொடர்புடைய கூட்டுறவு சங்கங்களே அதன் வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அளவிற்குள் பேரவையின் ஒப்புதல் பெற்று பொது நிதியிலிருந்து மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

இச்சுற்றறிக்கை வழங்கப்பட்டு 24 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், கட்டிட பொருட்களின் விலைவாசி ஏற்றத்தினை கருத்தில் கொண்டு, பிரதம கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் மத்திய மற்றும் தலைமைக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு செலவுகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட உச்சவரம்பினை மாற்றியமைத்து தர, தமிழ்நாடு கூட்டுறவு நுகர்வோர் இணையத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் சென்னை மண்டலத்தின் கூடுதல்பதிவாளர் கோரியதை தொடர்ந்து, திருந்திய உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவுச் சங்கங்களுக்கு ஏற்கெனவே சொந்தமாக உள்ள கட்டிடங்களில் பராமரிப்பு பணிகளுக்கு ஆகும் செலவுகளை கூட்டுறவு சங்கங்களே அதன் வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அளவுக்குள், பேரவையின் ஒப்புதல் பெற்று இப்பணிகளுக்கான செலவினங்களை மேற்கொள்ளலாம் என்று திருந்திய அறிவுரைகள் வழங்கப்படுகிறது.

பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு செலவுகளுக்கு பிரதம கூட்டுறவு சங்கங்கள் ரூ.2.5 லட்சத்திற்கும், மத்திய மற்றும் தலைமை கூட்டுறவு சங்கங்கள் ரூ.5 லட்சத்திற்கும் உட்பட்டு செலவினங்களை மேற்கொள்ளலாம். இந்த செலவினங்கள் அரசு அங்கீகாரம் பெற்ற ஒப்பந்ததாரர்களிடம் விலைப்புள்ளிகள் பெற்று முடிவு செய்ய வேண்டும். இதற்கான இறுதித் தொகை பணி முடிவுற்ற பின்னரே வழங்கப்பட வேண்டும். இந்த அறிவுரைகளை சென்னை மண்டல கூடுதல் பதிவாளர் மற்றும் அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களும் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கூட்டுறவுச் சங்கங்களுக்கும் தொடர்புறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். அனைத்துக் கூட்டுறவுச் சங்கங்களும் இச்சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள வரைமுறைகள் சொந்தமாக உள்ள கட்டிடங்களை பராமரித்தல் மற்றும் பழுதுபார்த்தல் பணிகளுக்கு மட்டுமே கடைபிடிப்பதை உறுதி செய்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர். இச்சுற்றறிக்கையை பெற்றுக்கொண்டமைக்கான ஒப்புதலை உடன் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Increase in ceiling on maintenance, repair expenses of co-operative society buildings: Information from Registrar of Co-operative Societies
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...