×

திருவாடானை அருகே பிரதான சாலையின் குறுக்கே மணிமுத்தாறு உபரிநீர் செல்லும் வழியில் மேம்பாலம் தேவை

* வெள்ளப்பெருக்கில் மூழ்கும் தரைப்பாலம்

* கடந்து செல்ல அவதிப்படும் பொதுமக்கள்

திருவாடானை : தாலுகா தலைநகரமான திருவாடானையில் இருந்து சூச்சணி வழியாக தோட்டாமங்கலம் செல்லும் பிரதான சாலை உள்ளது. இந்த சாலையின் வழித்தடத்தில் சூச்சணி, கிளவண்டி. கோனேரிக்கோட்டை, கொட்டாங்குடி, திருவடிமிதியூர், தோட்டாமங்கலம் உட்பட சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அப்பகுதியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை காலங்களில் பெய்த தொடர் கனமழையினால் இந்த பிரதான சாலையின் குறுக்கே செல்லும் மணிமுத்தாறு உபரிநீர் செல்லக் கூடிய வழித்தடத்தில் உள்ள சூச்சணி தரைப்பாலம் நீரில் மூழ்கி போக்குவரத்து முழுவதுமாக துண்டிக்கப்பட்டது.

இதனால் கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை காலங்களில் அப்பகுதிகளிலிருந்து திருவாடானைக்கு அத்தியாவசிய மற்றும் அவசரத் தேவைக்காக வரும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளும், நடந்து செல்லும் பாதசாரிகளும் நீரில் மூழ்கிய தரைப்பாலத்தை கடக்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

இந்த நிலையில் கல்லூர் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் பருவமழை காலங்களில் கடந்த 2 ஆண்டுகளாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் மூழ்கிய தரைப்பாலத்தை கடந்து செல்லும் வகையில் கயிறு கட்டி பாதசாரிகள் அதனை பிடித்துக்கொண்டு நடந்து சென்றனர். மேலும் அப்பகுதி முதியவர்களும், பெண்களும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ. மாணவியர்களும் வெள்ளப்பெருக்கால் மூழ்கிய தரைப்பாலத்தை தினசரி கடந்து செல்லும்போது அச்சத்துடன் சென்றனர்.

மேலும் அந்தப்பகுதியில் உள்ள சூச்சணி, கல்லூர், திருவாடானை, கோனேரிகொட்டை, அஞ்சுகோட்டை ஆகிய கண்மாய்களில் மழைநீர் நிரம்பி உபரி நீரானது கழுங்கு பகுதியில் வெளியேறி வரத்துக்கால் மூலம் மணிமுத்தாறு வழித்தடத்தில் கலப்பதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு திருவாடானை - சூச்சணி பகுதியை இணைக்கும் இந்த பிரதான தரைப்பாலத்தை கடந்து சென்று கடலில் கலக்கிறது. பருவமழை காலங்களில் ஏற்படும் புயல்களால் தொடர் கனமழை பெய்து இப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி உபரி நீரானது இந்த தரைப்பாலத்தின் வழியாக செல்லும்போது வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலம் நீரில் மூழ்குவதால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு விடுகிறது.

அதனால் மழை காலங்களில் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். ஆகையால் பருவமழை காலங்களில் பெய்யும் தொடர் கனமழையினால் ஏற்படும் வெள்ளப்பெருக்கால் அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்படாமல் இருக்கும் வகையில் இந்த தரைப்பாலத்தை இடித்து அகற்றிவிட்டு சிறிய மேம்பாலம் கட்டித்தந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலரகள் மூர்த்தி, சுப்பிரமணியன் ஆகியோர் கூறும்போது, இந்த பிரதான சாலையில் உள்ள தரைப்பாலத்தை கடந்து தான் சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை செல்ல வேண்டும். மேலும் இப்பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை காலங்களில் இங்குள்ள நீர் நிலைகள் நிரம்பி உபரிநீர் கழுங்கு வழியாக வெளியேறி மணிமுத்தாறு வழித்தடத்தில் கலந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலம் நீரில் மூழ்கியது.

இதனால் மழை காலங்களில் இப்பகுதிகளில் இருந்து திருவாடானைக்கு அவசர மற்றும் அத்தியாவசியத் தேவைக்காகக்கூட பொதுமக்கள் செல்ல முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகினர். ஆகையால் மாவட்ட நிர்வாகம் இந்த தரைப்பாலத்தை இடித்து அகற்றிவிட்டு சிறிய மேம்பாலம் கட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமெனக் கூறினர்.

Tags : Thiruvadanai ,Manimutthar Overwater , Thiruvadanai : There is a main road from Thiruvadanai, the taluk capital, to Thottamangalam via Chuchani.
× RELATED திருவாடானை அரசு கல்லூரியில் இரண்டாம் கட்ட பயிற்சி முகாம்